கடற்கரை சாலையை மணல் மூடிவிட்டது;நீண்ட வரிசையில் கடைகள் முளைத்தன


கடற்கரை சாலையை மணல் மூடிவிட்டது;நீண்ட வரிசையில் கடைகள் முளைத்தன
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையை மணல் மூடிவிட்டது. அதன்மேல் கடைகள் நீண்டவரிசையில் முளைத்துள்ளன. இத்தனை நடந்த பின்னும் அதை கண்டும் காணாதது போல் அதிகாரிகள் கடந்து செல்கிறார்கள்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்லும் சாலையை மணல் மூடிவிட்டது. அதன்மேல் கடைகள் நீண்டவரிசையில் முளைத்துள்ளன. இத்தனை நடந்த பின்னும் அதை கண்டும் காணாதது போல் அதிகாரிகள் கடந்து செல்கிறார்கள்.

தனுஷ்கோடி

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை அமைந்துள்ளது.

புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்த பின்பு, பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை வசதி அமைக்கப்பட்டது. இதை ஒரு வரப்பிரசாதமாகவே சுற்றுலா பயணிகளும், ராமநாதபுரம் மாவட்ட மக்களும் கருதுகிறார்கள்.

ராமேசுவரம் வருகிறவர்கள் அப்படியே தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றுவர தவறுவதில்லை. அரிச்சல்முனை கடற்கரை சாலை வளைவில் நின்று கடலின் அழகையும், நடுக்கடலில் உள்ள மணல் திட்டுக்களையும் பார்த்து ரசிக்கின்றனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மணல் மூடியது

இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் சில நாட்களாக பலத்த காற்று காரணமாக அரிச்சல் முனை சாலையானது ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலால் மூடப்பட்டு இருக்கிறது. ஆனால் மணலை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தனுஷ்கோடிக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் அரிச்சல்முனைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. அதேபோல் சுற்றுலா வாகனங்களும் ஒரு கிலோமீட்டர் முன்பாகவே சாலை ஓரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வரும் நிலை உள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் நடக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர்.

சாலையில் கடைகள்

இதுதான் சந்தர்ப்பம் என கருதியவர்கள், மணலால் மூடப்பட்ட சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் சங்கு, சிப்பி மாலை, தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்டவற்றை விற்பனை செய்யக்கூடிய இடமாக மணல் மூடிய சாலையை மாற்றிவிட்டார்கள். அரிச்சல்முைனயில் சாலை இருந்ததா? என இப்போது அங்கு போகிறவர்கள் கேட்கும் நிலைதான் உள்ளது. அங்கு சென்றுவரும் அதிகாரிகளும் கண்டும், காணாமல் கடந்து செல்கிறார்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலையை மூடியுள்ள மணலை உடனடியாக அகற்றவும், சாலையில் அமைத்த கடைகளை ஓரமாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story