விருத்தாசலத்தில் பெண்கள் மூலம் ஆற்றை சுரண்டும் மணல் கொள்ளையர்கள் 40 மூட்டை, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை


விருத்தாசலத்தில் பெண்கள் மூலம் ஆற்றை சுரண்டும் மணல் கொள்ளையர்கள் 40 மூட்டை, ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை
x
தினத்தந்தி 8 Jan 2023 12:15 AM IST (Updated: 8 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பெண்கள் மூலம் கொள்ளையர்கள் ஆற்று மணல் சுரண்டப்படுகிறது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று விருத்தாசலம். இந்நகரம் எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறதோ, அந்த அளவுக்கு குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

இதற்காக நகரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டும், குற்ற சம்பவங்கள் குறைத்தபாடில்லை. அதிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் தினம்தினம் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர்.

ஆற்றை சுரண்டும் கொள்ளையர்கள்

ஆம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை மணிமுக்தாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகளும் வளமாக்கி செல்கிறது. இந்த இரண்டு ஆறுகளிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மணல் குவாரிகள் இயங்கி வந்தது. இந்த மணல் குவாரிகளை இழுத்து மூட வேண்டும் என விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் பலகட்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக மணல் குவாரிகள் மூடப்பட்டன.

இருப்பினும் ஆற்றை சுரண்டியே பழக்கப்பட்ட மணல் கொள்ளையர்கள், தற்போது இரவில் மணல் திருட்டில் ஈடுபடுகின்றனர். பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணலை அள்ளி டிராக்டர் மற்றும் லாரிகளில் கடத்துவது ஒரு ரகம் என்றால், மாட்டு வண்டிகளில் மனிதர்களே அள்ளிப்போட்டு மணல் கடத்துவது மற்றொரு ரகம்.

சொகுசு கார்களில் கடத்தல்

தற்போது மணல் கொள்ளையர்கள் தினசரி ஒவ்வொரு உத்திகளை கையாளுகின்றனர். அதாவது மோட்டார் சைக்கிளை ஆற்றின் நடுப்பகுதிக்கே கொண்டு சென்று சாக்கு பைகளில் மணலை கட்டி திருடி செல்கின்றனர். சிலர் சாக்கு பைகளில் மணலை் அள்ளி, அதனை மூட்டையாக கட்டி ஆற்றங்கரையோரம் உள்ள முட்புதர்களில் மறைத்து வைக்கின்றனர். பின்னர் மற்றொரு நாட்களில் வந்து அதனை கடத்தி செல்கின்றனர்.

ஒரு சிலர் அதற்கும் ஒருபடி மேல் சென்று சொகுசு கார்களில் சாக்கு பைகளுடன் வந்து மணலை கடத்தி செல்கின்றனர். இதுபோன்ற கடத்தல்களை போலீசார் கண்டு கொள்வதே இல்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அப்படியே மணல் கொள்ளையர்களை கண்டுபிடித்தாலும், அவர்கள் சாக்கு மூட்டைகளில் அள்ளி செல்வதால் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை விட்டு விடுகின்றனர்.

மணல் கடத்தலில் பெண்கள்

மேலும் விருத்தாசலம் பழமலைநாதர் நகர் பகுதியில் மாரி ஓடையை கடக்கும் வகையில் அமைக்கப்பட்ட பாலம் சிதிலமடைந்து இப்ப விழுமோ... எப்ப விழுமோ என்ற நிலையில் உள்ளது. இந்த பாலம் தான், தற்போது மணல் கடத்தலுக்கு பாலமாக அமைந்துள்ளது.

காரணம், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அந்த பாலம் வழியாக சென்று மணிமுக்தாற்றில் மணலை சாக்குப்பைகளில் அள்ளி கொள்ளையடிக்கின்றனர். பின்னர் அங்கு வரும் மணல் வியாபாரிகள் 40 மூட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி வாங்கி, அதனை மினி லாரி, டிராக்டர், லாரி உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி சென்று பல ஆயிரம் ரூபாய்க்கு விற்று விடுகின்றனர்.

நடவடிக்கை இல்லை

சர்வசாதாரணமாக நடக்கும் இந்த மணல் கொள்ளையை தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இதுபோன்ற மணல் கொள்ளை சம்பவங்கள் விருத்தாசலம் பகுதியில் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதனை போலீசார் கண்டும் காணாமலும் சென்று விடுகின்றனர்.

அப்படியே ஒரு சில போலீசார் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் இடத்திற்கு சென்றால் அங்கு பெண்களே இந்த சம்பவங்களில் ஈடுபடுவதால் அவர்களை கைது செய்ய மனம் இல்லாமல் எச்சரித்துவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இதனை மணல் கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக வைத்து கொண்டு பெண்களை வைத்து மணல் கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

வளம் பாதிப்பு

இதேநிலை நீடித்தால் ஆற்றங்கரையில் இருக்கும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் பலர், இந்த தொழிலை, 100 நாள் வேலை திட்டம் போல் செய்ய தொடங்கி விடுவார்கள். இதனால் ஆற்றின் வளம் பாதிக்கப்பட்டு, விளை பொருட்கள் சாகுபடி செய்வது வெகுவாக குறைந்து விடும். மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதனால் மணல் கொள்ளையை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாலைவனமாக மாறும் விளை நிலங்கள்

இதுகுறித்து விருத்தாசலம் சமூக ஆர்வலர் செந்தில்குமார் கூறுகையில், ஆற்றுப்பகுதியில் உள்ள மணல் வளம் தான் ஆற்றில் ஓடும் நீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டம் உயர காரணமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மணலை கொள்ளையர்கள், கொள்ளை அடித்து பெரும் லாபம் அடைந்து வருகின்றனர். இவ்வாறு தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வந்தால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விடும். குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது. விளை நிலங்கள் எல்லாம் பாலைவனமாக மாறிவிடும். விருத்தாசலம் பகுதியில் ஏற்கனவே ஆற்றில் மணல் குறைவாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற குறைந்த மணலையும் கொள்ளை அடித்தால் ஆற்றில் ஓடும் நகராட்சி கழிவுநீர் நிலத்தடி நீர்மட்டத்தில் கலந்து விடும். போலீசார் இதனை கண்டும் காணாமலும் இருந்தால் எதிர்கால சந்ததிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு போலீசார் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

வருங்கால தலைமுறையை காக்க...

மருத்துவ பட்டப்படிப்பு மாணவி சொப்னா:- ஆற்று மணல், தண்ணீர், இயற்கை வளங்கள் அனைத்தையும் எவராலும் உருவாக்க இயலாது. அப்படிப்பட்ட ஆற்று மணலை திருடுவதன் மூலம் நீர்நிலைகள் பாதிக்கப்படுகின்றன. மணல் கொள்ளை தடுப்பு பெரிதாக பேசப்பட்டாலும் நடைமுறையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் வருங்கால சந்ததியினருக்கு நீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகும். ஆற்று மணலை நூதன முறையில் மூட்டை மூட்டையாக இரு சக்கர வாகனங்களிலும், சொகுசு கார்களிலும் கடத்துவது என்பது வேதனையாக உள்ளது. குறிப்பாக பெண்களை கூலி வேலைக்கு அமர்த்தி அன்னக்கூடை, சாக்கு மூட்டைகளில் மணல் கடத்துவது விருத்தாசலம் பகுதியில் பெருகி வருகிறது. ஆற்று மணலை பாதுகாத்து வைத்தால் மட்டுமே நீர்நிலை மற்றும் விவசாயம் செழிப்பாக இருக்கும். நாடும் வளமாக இருக்கும். ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நம் வருங்கால தலைமுறையை காக்க அரசும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story