மதினாப்பல்லி மலட்டாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்


மதினாப்பல்லி மலட்டாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும்
x

மதினாப்பல்லி மலட்டாற்றில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெடுமாறன் தலைமையில் நடந்தது. இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், தோட்டக்கலை, வனத்துறை சார்ந்த உயர்அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணிப்போம் என்றனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசியதாவது:- காட்டு யானைகள், காட்டு பன்றிகள், குரங்குகள், மான்கள் ஆகியவை விவசாய விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுபத்தி வருவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. விவசாயிகளால் வன விலங்குகளை தடுப்பதற்கு வனத்துறையின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடந்த 6 மாத காலமாக கேட்டு வருகிறோம். அதையும் வனத்துறையினர் செய்யவில்லை.

தடுக்க வேண்டும்

கடந்த கூட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக அமைத்து அவர்களின் தொலைபேசி எண்களை பெற்று வன விலங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் வனத்துறையினர் அதை பின்பற்றவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

மதினாப்பல்லி மலட்டாற்றில் தொடர்ந்து இரவு நேரங்களில் மணல் கடத்தப்பட்டு வருவதால் ஆற்றில் பள்ளங்கள் உருவாகியுள்ளது. வரும் கோடை காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். ஆற்றுப்படுகையிலுள்ள விவசாய விளை நிலங்கள் சரிந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விளை நிலங்கள் எல்லாம் ஆறாகி வருகின்றன. உடனடியாக மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

புகார் செய்யப்படும்

இதற்கு பதிலளித்த தாசில்தார் நெடுமாறன் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காதது குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று புகார் தெரிவிப்பதாக கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் சத்திய லட்சுமி, வனவர் தயாளன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமானுஜம் உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story