பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்


பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்
x

பாலாற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுக்க வேண்டும் என திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், மாற்றுதிறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 374 பேர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மசி சம்ந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அப்போது அவர் பேசுகையில் கடந்த மாதம் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். 4 வாரங்களை கடந்தும் இன்னும் 552 மனுக்கள் மீது தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. மனுதாரருக்கு உரிய பதில் கூட வழங்கவில்லை. அரசு அலுவலர்கள் தங்கள் பணியை சரியாக செய்ய வேண்டும். எனவே, கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்களில் தீர்வு காணப்படாமல் உள்ள 552 மனுக்கள் மீது இன்னும் 2 நாட்களில் தீர்வுகாண வேண்டும் என கூறினார்.

இழப்பீடு

கூட்டத்தில் தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஆம்பூர் அடுத்த சோலூரில் செயல்பட்டு வந்த 2 தோல் தொழிற்சாலைகள் நிர்வாக வசதிக்காக அங்கு பணியாற்றிய 300 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது. இதனால், வேலை இழந்த தொழிலாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, கோர்ட்டு வழிகாட்டுதல்படி தொழிலாளர் இணை ஆணையர் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் பணிநீக்கம் செய்யப்பட்டநாளில் இருந்து 58 வயது வரைக்கும் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

எனவே, கோர்ட்டு உத்தரவுப்படி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மணல் கடத்தலை தடுக்க வேண்டும்

அதேபோல் தே.மு.தி.க. சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திம்மாம்பேட்டை, ஆவாராங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, வடக்குபட்டு, எக்ஸலாபுரம், அம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள பாலாற்றுப்பகுதிகளில் அதிக அளவில் மணல் திருட்டு நடக்கிறது. மாட்டு வண்டிகள், டிப்பர் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கடத்தப்படும் மணல் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு கடத்தப்படுகிறது. மணல் திருட்டு நடைபெறுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் பாசன கால்வாய் மேடாக மாறிவிட்டது. பாலாற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும், ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் பெரும்பாலான ஏரிகள் வறண்டே காணப்படுகிறது. எனவே, பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நிகழ்ச்சியில், கலால் உதவி ஆணையர் பானு, ஊராட்சிகளின் உதவிஇயக்குநர் விஜயகுமாரி, வேலை வாய்ப்பு அலுவலர் ரேவதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story