மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி
திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழாவையொட்டி மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
திருஉத்தரகோசமங்கை,
திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா திருவிழாவையொட்டி மரகத நடராஜருக்கு சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
ஆருத்ரா திருவிழா
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.
இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
சன்னதி திறப்பு
ஆருத்ரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6-ம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம் தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளை 5-ம் தேதி காலையிலிருந்து 6-ம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
உள்ளூர் விடுமுறை
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.