மணல் மூட்டைகள் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு
தாண்டிக்குடி மலைப்பாைதயில் சீரமைப்பு பணியின்போது, அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வத்தலக்குண்டுவில் இருந்து பெரும்பாறை, தடியன்குடிசை வழியாக தாண்டிக்குடிக்கு செல்ல மலைப்பாதை உள்ளது. இங்கு சமீபத்தில் பெய்த கனமழையினால், தாண்டிக்குடியை அடுத்த பட்டலங்காடு பிரிவு அருகே திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து மலைப்பாதையை சீரமைக்கும் பணி நடந்தது. அந்த வழியாக, வாகனங்களும் சென்று வந்தன. இந்தநிலையில் தாண்டிக்குடி, பெரும்பாறை, மங்களம்கொம்பு மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டித்தீர்த்தது.
இதன் எதிரொலியாக, பட்டலங்காடு பிரிவு அருகே மலைப்பாதை சீரமைப்பு பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள் திடீரென சரிந்தது. இதனால் மலைப்பாதை சேதமடைந்து வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தாண்டிக்குடி, அம்பேத்கர் காலனி, கடுகுதடிபுதூர் உள்ளிட்ட கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்குள்ள தோட்டங்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.