சங்குகுளி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
தூத்துக்குடியில் சங்குகுளி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ஏராளமான மீனவர்கள் சங்குகுளி தொழில் செய்து வருகின்றனர். இதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிலரும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு உள்ளூர் சங்குகுளி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த 5-ந் தேதி தூத்துக்குடி அருகே நடுக்கடலில் சங்குகுளி தொழிலாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக திரேஸ்புரத்தை சேர்ந்த ஒருவரை சில சங்குகுளி தொழிலாளர்கள் தாக்கி உள்ளனர். இந்த பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், போலீசார் இருதரப்பையும் சேர்ந்த சங்குகுளி தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று வடபாகம் போலீசார் அலாவுதீன் என்பவரை விசாரணைக்காக அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த, அவரது ஆதரவு சங்குகுளி தொழிலாளர்கள் திரேஸ்புரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் நேற்று மாலையில், சங்குகுளி தொழிலாளர்கள் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை அவரது வீட்டில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சங்குகுளி மீனவர் பிரச்சினை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) உதவி கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட உள்ளது.