குழித்துறை பகுதியில் சுகாதார சீர்கேடுநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
குழித்துறை நகராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
குழித்துறை,
குழித்துறை நகராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
நகராட்சி கூட்டம்
குழித்துறை நகராட்சி கூட்டம் அதன் தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ராமதிலகம், பொறியாளர் பேரின்பம், சுகாதார அதிகாரி ஸ்டாலின் குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் நகராட்சியில் உள்ள சுகாதார கேடுகள் பற்றி கேள்விகள் எழுப்பினர். அப்போது கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
மினி குமாரி: குழித்துறையில் தொடங்கப்பட்ட கழிவறை பணிகள் என்ன நிலையில் உள்ளது. ஆணையாளர்: அந்த இடத்தில் கழிவறையை கட்ட முடியாது என்றும் வேறு இடம் தெரிவிக்குமாறும் பொதுப்பணித்துறையினர் கேட்டுள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.
ரோஸ்லெட்: வெட்டுமணி பகுதியில் வைக்கப்பட்டுள்ள கடையை சொன்னபடி அகற்றவில்லை என்றால் நான் அங்கே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன்.
சுகாதார சீர்கேடு
சர்தார் ஷா: குழித்துறை நகராட்சி பகுதியில் சுகாதாரப் பணிகளில் மிகப்பெரிய மந்த நிலை ஏற்பட்டுள்ளது. 35 நிரந்தர பணியாளர்கள், 45 ஒப்பந்த பணியாளர்கள் இருந்தும் தூய்மை பணிகள் சீராக செய்யாமல் அதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சுகாதார அலுவலகத்தில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாமல் தேங்குகிறது. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுகிறது.
ரெத்தினமணி: சுகாதார பிரிவு அலுவலகத்தில் அதிகாரிகள் சரியாக செயல்படாமல் இருந்தால் சுகாதார அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்துவோம். ரீகன்: தூய்மை பணியாளர்கள் சரியாக வேலை செய்வதில்லை. கேட்டால் சம்பளம் சரியாக கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். துப்புரவு பணியாளர்களை கண்காணிக்க வேண்டும்.
கழிவுநீர் குழாய்கள் அடைப்பு
ரெத்தினமணி: நகராட்சி பகுதியில் வீடுகளில் உள்ள கழிவுநீர் குழாய்களை அடைப்பதாக இருந்தால் அனைத்து வீடுகளுக்கும் அடைக்க வேண்டும். கழிவுநீரை 5 அடி குழி எடுத்து அதில் தேக்க முடியாதவர்களுக்கு அதற்குரிய வழிமுறைகளை செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் அட்லின் கெனில், அருள்ராஜ், ஜுலியட் மெர்லின் ரூத் உள்பட பலர் பேசினர்.
தொடர்ந்து மன்ற பொருள்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.