திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சிற்றம்பலம் புராதனவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புராதனவனேஸ்வரர் கோவில்
திருச்சிற்றம்பலத்தில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புராதனவனேஸ்வரர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு முக்கிய ஊர்களில் இருந்து பக்தர்கள் அவ்வப்போது வருகை தருகின்றனர். அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மேலும், வருடம் முழுவதும் இக்கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன.
ஆனால் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்குளக்கரையில் உடைமாற்றும் அறை இதுவரை கட்டிக்கொடுக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்பட்டு வருகி்ன்றனர்.
சுகாதார சீர்கேடு
பவுர்ணமி உள்ளிட்ட இதர நாட்களில் கோவிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவதற்கும், நடை பயிற்சி செய்பவர்களுக்கு வசதியாக சிமெண்டு சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிமெண்டு சாலை ஓரத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி, கோவில் வளாகத்தை தூய்மையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.