கூட்டுறவு சங்க அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணா
திண்டுக்கல்லில் கூட்டுறவு சங்கத்தில் தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் ஆர்த்தி தியேட்டர் சாலையில் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்க்கும் 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் நேற்று இந்த சங்க அலுவலகத்தில் 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திரண்டனர். பின்னர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் நாங்கள் பெற்ற கடன் தொகைக்கான தவணை தொகையை மாதந்தோறும் முறையாக செலுத்தி வருகிறோம். மேலும் கூட்டுறவு சங்கத்தில் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வைப்பு தொகையும் செலுத்தி உள்ளோம். இந்த நிலையில் கடன் தொகைக்கான தவணை தொகையை முழுமையாக செலுத்திய பிறகும் கணக்கை முடித்து வைக்க சங்க அலுவலர்கள் மறுக்கின்றனர். மேலும் நாங்கள் செலுத்திய வைப்பு தொகைக்கான வட்டி, சேமிப்பு நிதி ஆகியவற்றையும் 5 ஆண்டுகளாக தர மறுக்கின்றனர். எனவே எங்களின் கடன் கணக்கை முடித்து வைப்பதுடன், வைப்பு தொகை, சேமிப்பு நிதி ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தூய்மை பணியாளர்கள் சார்பில் சிலர், சங்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டு குறித்து சங்க அதிகாரிகளிடம் கேட்ட போது, கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து தவணை தொகையை அவர்களின் சம்பளத்தில் இருந்து மாநகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்கிறது. அந்த தொகை கூட்டுறவு சங்கத்துக்கு செலுத்தப்பட்ட பின்னரே தூய்மை பணியாளர்களின் கடன் கணக்கை முடித்து வைக்க முடியும். இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.