திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்


திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
x
தினத்தந்தி 4 Aug 2023 1:30 AM IST (Updated: 4 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

தினமும் சம்பளமாக ரூ.594 வழங்கக்கோரி, திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல்

தூய்மை பணியாளர்கள் முற்றுகை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்துக்கு தூய்மை பணியாளர்கள் நேற்று திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.594 வழங்க வேண்டும், டிரைவர்களுக்கு ரூ.675 சம்பளமாக ஊதியம் கொடுக்க வேண்டும். தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களை நியமிக்காமல் மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக பணி வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு 8 மணி நேர பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்காத தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த வடக்கு போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story