தூய்மை பணியாளர்கள் தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிக்க வேண்டும்


தூய்மை பணியாளர்கள் தினமும் வீடுகளில் குப்பைகள் சேகரிக்க வேண்டும்
x

சாலைகளில் குப்பைகள் வீசுவதை தவிர்க்க தூய்மை பணியாளர்கள் தினமும் குப்பைகள் சேகரிக்க வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி அறிவுறுத்தினார்.

வேலூர்

மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தினந்தோறும் குப்பைகள் சேகரித்து வருகிறார்கள். குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்கள் குப்பைகளை தரம்பிரித்து வழங்காமல் கொடுப்பதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி நேற்று காலை சாய்நாதபுரம், பாகாயம், ஓட்டேரி பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணிகளை திடீரென ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் குப்பைகள் வாங்க வருகிறார்களா?, நீங்கள் தனித்தனியாக குப்பைகளை பிரித்து கொடுக்கிறீர்களா என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் தூய்மை பணியாளர்கள் வீடுகள்தோறும் குப்பைகள் சேகரிப்பதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தினமும் குப்பைகள் சேரிக்க...

அதைத்தொடர்ந்து கமிஷனர் ரத்தினசாமி தூய்மை பணியாளர்களிடம், தினந்தோறும் அனைத்து வீடுகளிலும் சென்று குப்பைகளை சேகரிக்க வேண்டும். மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும். வேலை, தொழில் உள்ளிட்ட காரணங்களால் சில வீடுகளில் தினமும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்த வீடுகளை கண்காணித்து குப்பைகளை பெற வேண்டும். அவர்கள் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகள் வழங்காவிட்டால் சாலை அல்லது தெருவோரத்தில் குப்பையை வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு குப்பைகள் வீசப்படுவதை தடுக்கும் வகையில் தூய்மை பணியாளர்கள் அந்த வீட்டிற்கு சென்று குப்பைகளை சேமித்து வைத்திருந்து பின்னர் தருமாறு அறிவுறுத்த வேண்டும். எந்த நிலையிலும் குப்பைகளை பொதுமக்கள் தெருவில் வீசி விடக்கூடாது. இதில் தூய்மை பணியாளர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது வேலூர் மாநகர் நல அலுவலர் கணேஷ், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story