ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக போராட்டம்: மாநகர் பகுதியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை
குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோட்டில் தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகர் பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
போராட்டம்
ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளில் தூய்மை பணியாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சிகளில் அடிப்படை சேவை பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், குடிநீர் வழங்கல் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை இயக்கி பராமரித்தல், கழிவு நீர் அகற்றுதல், தெரு விளக்குகளை பராமரித்தல் போன்ற பணிகளை அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் மேற்கொள்ள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை எதிர்த்தும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் ஈரோடு மாநகராட்சி தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து கடந்த 31-ந்தேதி முதல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3-வது நாள்
இதற்கிடையில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் சிவகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று 3-வது நாளாக தற்காலிக தூய்மை பணியாளர்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளதால் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி, சாக்கடை அடைப்புகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
குவிந்து கிடக்கும் குப்பை
இதன் காரணமாக ஈரோடு பெரியவலசு, முனிசிபல் காலனி, கருங்கல்பாளையம், சின்னசேமூர், எல்.வி.ஆர். காலனி, வீரப்பன் சத்திரம், சூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது.
இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். மேலும் காற்று வீசும்போது குப்பைகள் பறந்து செல்வதால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகர் பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு
மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் வந்து தங்களது கட்சி சார்பில் ஆதரவை தெரிவித்து கொண்டார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுவை எம்.எல்.ஏ.விடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என உறுதி அளித்தார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மனுல் ஹக்கீம் தனது கட்சியினருடன் வந்து தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.