குற்றங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் செயல்பட வேண்டும்;சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு


குற்றங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் செயல்பட வேண்டும்;சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேச்சு
x

குற்றங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் செயல்பட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குற்றங்களை தடுக்க போலீசாருடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் செயல்பட வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

தூய்மை பணியாளர்கள்

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். முக்கியமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் ரோந்து போலீசாரின் சட்டையிலும், நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸ் வாகனங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடக்கிறது.

இந்தநிலையில் மாநகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களிடையே நெருங்கிய தொடர்பில் இருக்கும் தூய்மை பணியாளர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பேசியபோது கூறியதாவது:-

சட்ட விரோத செயல்கள்

குமரி மாவட்டத்தில் குற்றங்கள் நடந்தால் உடனே 7010363173 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இருள் சூழ்ந்த பகுதிகளில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாகவோ, போதை பொருட்கள் விற்பனை அல்லது பயன்படுத்துவது குறித்து தகவல் தெரிந்தாலும் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தினமும் தூய்மை பணி மேற்கொள்ளும்போது அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் புதிதாக ஏதேனும் சந்தேகப்படக் கூடிய நபர்கள் பற்றி அறிந்தாலும் தகவல் தெரிவிக்கலாம். இல்லை எனில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம்.

தூய்மை பணியாளர்கள் கொடுக்கும் ஒரு சிறு தகவல் பெரும் அளவில் குற்றங்களை தடுக்க காவல்துறைக்கு உதவ கூடியதாக இருக்கும். எனவே குமரி மாவட்டத்தில் கொரோனா காலங்களில் முன்கள பணியாளர்களாக காவல்துறையுடன் இணைந்து செயல்பட்டது போல குற்றங்களை தடுப்பதிலும் காவல்துறையுடன் இணைந்து செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

முன்னதாக வடசேரியில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது, "இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதோடு பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கும் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் சாலை விதிகளை கடைப்பிடித்து வாகனம் ஓட்ட வேண்டும்" என்றார்.

இதை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story