ஈரோட்டில் 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; நாளை தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


ஈரோட்டில் 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம்; நாளை தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
x

ஈரோட்டில் தொடர்ந்து 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு

ஈரோட்டில் தொடர்ந்து 7-வது நாளாக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை தீப்பந்தம் ஏந்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலை நிறுத்த போராட்டம்

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும், பணி நிரந்தரம், குறைந்தபட்ச அரசு நிர்ணயித்த கூலி, முதல் தேதியில் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 23-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையில் தங்களது கோரிக்கைகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுதல், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுதல், ஊர்வலமாக சென்று கலெக்டரிடம் மனு கொடுத்தல், உண்ணாவிரத போராட்டம் போன்ற போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தீப்பந்தம் ஏந்தி...

இந்த நிலையில் நேற்று 7-வது நாளாக தூய்மை பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தது. மேலும் ஈரோடு மாவட்ட சி.ஐ.டி.யு. தலைமை அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் உள்பட அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில், 'வேலை நிறுத்த போராட்டத்தை இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தொடர்வது என்றும், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து பணியாளர்களும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், காலை 10 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும், நாளை (சனிக்கிழமை) மாலை கருப்பு பட்டை அணிந்து தீப்பந்தம் ஏந்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

குப்பைகள் தேக்கம்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 7 நாட்களாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குப்பைகள் சேகரிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் குப்பை தொட்டிகளும் வைக்கப்படாததால், பொதுமக்கள் குப்பைகளை வீட்டிலேயே வைத்துள்ளனர். சிலர் சாலையோரம் வீசி விட்டு செல்கிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது.

எனவே தூய்மை பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களுடைய போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குப்பைகளை சேகரிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story