கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம்


கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம்
x
திருப்பூர்


மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்துள்ள நிலையில், இந்த பகுதியில் இருந்ததாக கருதப்படும் கோட்டை குறித்து தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கல்வெட்டுகள்

இதுகுறித்து உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்துள்ளதாவது:- ஆண் பொருநை எனப்படும் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கரைவழி நாட்டு கடத்தூர் மிகப் பழமையான பாரம்பரியத்தை தன்னுள் கொண்டுள்ளது. இங்கு கிடைக்கப் பெற்றுள்ள கல்வெட்டுகளில் சித்ரமேழி நாட்டார் கல்வெட்டு மிக முக்கிய இடம் பிடிக்கிறது. இந்த கல்வெட்டு வேளாண்மை சார்ந்தும், அப்போதிருந்த வணிகம் சார்ந்தும் பேசக்கூடிய ஒரு மிகப் பெரிய கல்வெட்டு ஆகும். வழக்கமான கல்வெட்டுகள் மக்களிடமிருந்து பெற்ற ஆலயங்கள் பற்றியும், கோவிலுக்காக கொடுத்த நிலக்கொடை பற்றியும் கொடுத்தவர்களின் பெயர்கள் போன்றவற்றையே கொண்டிருக்கும். அந்த வகையில் கடத்தூர் மருதீசர் கோவிலிலும், அருகிலுள்ள கணியூர், சோழமாதேவி, கண்ணாடிப்புத்தூர், கொழுமம் சிவத்தலங்களிலும் நிலக்கொடை சார்ந்த 85-க் கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சித்ரமேழி நாட்டார் கல்வெட்டு அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டதாக உள்ளது.

கால்நடை சந்தை

கடத்தூரிலிருந்து தெற்கில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு செல்லும் சாலையின் மேற்புறத்தில் தற்போதிருக்கும் சுடுகாட்டுப்பகுதிக்கு அருகில் சித்ரமேழி நாட்டார் கல்வெட்டு உள்ளது. சித்ரமேழி என்பது பழங்காலத்தில் உழவர்கள் ஏர்க்கலப்பை மற்றும் கால்நடை சார்ந்த குறியீடுகளைத் தாங்கி நிற்கின்றது. வில் அம்பு, பூர்ண கும்பம், வாள், முரசு, அரசனின் மேலிருக்கும் வெண் கொற்றக்குடை, வெண்சாமரம், வெண்சங்கு மற்றும் அப்போதைய மண்ணின் மைந்தர்கள் பயன்படுத்திய உழவு சார்ந்த கருவிகளும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு காலத்தால் முந்தைய கல்வெட்டாக உள்ளது. கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டதுடன், அதைச் சுற்றி பாதுகாப்பாகவும் அகழியாகவும் நீர் அரண் என்ற பாதுகாப்பு இருந்துள்ளது.அதனால்தான் கடத்தூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து கால்நடை மற்றும் வேளாண் வணிகர்கள் பயன்படுத்தியதாகவும் தெரிய வருகிறது. இங்கு கோட்டை இருந்துள்ளதால் தொல்லியல் துறையினர்அகழ்வாய்வு செய்தால் இன்னும் ஏராளமான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

கடத்தூரில் மிகப்பெரிய கால்நடை சந்தை செயல்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம்

சித்ரமேழி நாட்டார் என்பவர்கள் குறிப்பாக வேளாண் தொழிலை மேற்கொண்டவர்கள்.அவர்களே வணிகம், அறப்பணி, ஊர் நாட்டாமை, போர்த்தளபதி, தட்டான் என பல தொழில்களிலும் பங்கேற்றனர். சோழர்கள் காலத்தில் சபை, நகரம், வணிகம் போன்ற குழுக்கள் இருந்தன. உழவுத்தொழில் மேற்கொண்ட குழுக்கள் சித்ரமேழி பெரிய நாட்டார் என்றும் அழைக்கப்பட்டனர்.அனைத்து சமயங்களிலும் சித்ரமேழி நாட்டார் ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதையே சைவ, வைணவ, சமண கோவில்களில் காணப்படும் சித்ரமேழி குறித்த செய்திகள் நமக்கு தெரிவிக்கின்றன. ஊர், நாடு, பெரிய நாடு, பேரிளமை நாடு என்பது பெரிய பகுதிகளாகும். இந்த பகுதிகளை நிர்வகிப்பவர்களுக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. எனவே தங்களது சமுதாயத்திற்கு முழுவதும் பொறுப்பானவர்களையே அதில் அமர்த்தி வந்துள்ளனர். அவர்கள் தமிழகத்திலும் குறிப்பாக தகடூரிலும் 10-ம் நூற்றாண்டில் செழிப்புடன் இருந்தமையையே இவை உணர்த்துகின்றன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். கரைவழிநாட்டு கடத்தூரில் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் பல சரித்திர சான்றுகள் புதைந்திருக்கலாம். எனவே தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story