திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான திருவிழா
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான திருவிழா
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான திருவிழா நடைபெற்றது. விழாவில் கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் 7 ஊர் புறப்பட்டு சென்றார்.
ஐயாறப்பர் கோவில் சித்திரை திருவிழா
தஞ்சை மாவட்டம் திருவையாறில் ஐயாறப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 29-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அப்போது 6 ஊர்களிலிருந்து சுவாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. 3-ந்தேதி தேரில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சப்தஸ்தான திருவிழா
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் மேளதாள, நாதஸ்வர இன்னிசை கச்சேரி, சிவாச்சாரியர்கள் வேத பாராயணம் முழங்க புறப்பட்டு சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது.
பொம்மை பூ போடும் நிகழ்ச்சி
நேற்று இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.
விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்திருந்தனர்.