மரக்கன்றுகள் நடும் விழா
மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
கடவூர் ஒன்றியம், வரவணை ஊராட்சிக்குட்பட்ட வ.வேப்பங்குடியில் பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளரும், கணினி தொழில்நுட்ப ஆலோசகர் (அமெரிக்கா) நரேந்திரன் கந்தசாமி வழிகாட்டுதல்படி மாரியம்மன் கோவில், கருப்பகோவில் வழி செல்லும் பாதை, நவலடியான் கோவில் கிழக்கே சுக்காம்பட்டி ரோடு வரையிலும், தெற்கு கோட்டைபுலிபட்டி ரோடு வரையிலும், புதியதாக கட்டியுள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை சுற்றிலும் பல்வேறு மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து கொள்ளுதின்னிபட்டியில் ஊர் பொதுமக்களுக்கு 400 கொய்யா கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும், மா, பலா, தென்னை, கொய்யா, வேம்பு, சரக்கொன்றை, புங்கன், பாதாம் உள்பட 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வரவணை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமையிலும், சின்னாண்டிபட்டி நாட்டாமை மகாலிங்கம் முன்னிலையிலும், பசுமைக்குடி தன்னார்வலர்கள் காளிமுத்து, கவிநேசன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டு நட்டு வைத்தனர். வேப்பங்குடியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. வரவணை ஊராட்சி முழுவதும் பசுமையாக்கும் திட்டத்தை பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் செயல்படுத்த முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.