கோத்தகிரி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
கோத்தகிரி கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
கோத்தகிரி, ஜூன்.8-
கோத்தகிரி கோர்ட்டு இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்கு கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு வனிதா தலைமை தாங்கினார்.
தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பதற்காக தமிழக அரசு 'பசுமைத் தமிழ்நாடு' திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. எனவே வனத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் காடுகளின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, மரக்கன்றுகளை நடவு செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.
மேலும் கிராமங்கள் தோறும் நடைபெறும் இலவச சட்ட உதவி முகாம்களில் அந்ததந்த கிராமங்களில் மரக் கன்றுகள் நடவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் கோர்ட்டு ஊழியர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.