தூத்துக்குடியில் மரக்கன்று நடும் விழா; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் மரக்கன்று நடும் விழா; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:15 AM IST (Updated: 11 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவை நேற்று கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழாவை நேற்று கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

மரக்கன்று நடும் விழா

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 3-வது மைல் மேம்பாலம் அருகே நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. மாநகராட்சி சார்பில் நடந்த இந்த விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன், மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டினர். தொடர்ந்து அப்பகுதியில் மாமரம், கொய்யா, பூவரசன், புங்கன், நெல்லிக்கணி உள்பட பல்வேறு வகையான 1,200 மரக்கன்றுகள் நடப்பட்டது.

உறுதிமொழி ஏற்பு

மேலும் தூய்மையான தூத்துக்குடி என்ற விழிப்புணர்வு உறுதிமொழியை கனிமொழி எம்.பி. தலைமையில் அனைவரும் எடுத்து கொண்டனர். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, உதவி ஆணையர் சேகர், மாநகராட்சி நகர்நல அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர்கள் அரிகணேஷ், ஸ்டாலின், ராஜசேகர், ராஜபாண்டி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், உதவியாளர் பிரபாகர், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story