பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு
இரவு நேரத்தில் விதிகளை மீறி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரித்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் ஒரு சில பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறி இரவு நேரங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்தநிலையில் இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இந்தநிலையில் எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் சாணார்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரவு 11 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசு ஆலைக்கு சென்ற போது அங்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள சரவெடிகளை 11 பெண் தொழிலாளர்கள் உள்பட 18 தொழிலாளர்கள் தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சந்திரசேகர், வெங்கடாசலம் என்ற பொருள்நாயக்கர், அமீத் ஆகியோர் மீது எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.