நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம்


நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம்
x
திருப்பூர்


உடுமலை தாலுகாவில் நிலஅளவை உபகரணங்கள் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறது.இதற்கு ஆய்வு செய்ய வேண்டும்

நிலஅளவை முறை

வரையறை இல்லாமல் பரவிக்கிடந்த நிலங்களை வகைப்படுத்துவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதே நிலஅளவை முறை,புலங்கள், உட்பிரிவுகள் அமைத்து அளவை பணி முடித்து நிலப்படங்கள் தயாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒருபோகம், இருபோகம், நஞ்சை, புஞ்சை, மானாவாரி என தனித்தனியாக நிலங்களை வகைப்படுத்தி வரிவசூல் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

அது முதல் இதுவரையிலும் நிலஅளவை டிராவர்ஸ் சர்வே, எளிய முக்கோண வடிவ அளவை, புங்கனூர் நில அளவை முறை, மூலைவிட்டம் மற்றும் செங்குத்தளவு முறை என நான்கு வகையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உபகரணங்கள் குறைபாடு

இந்த அளவைக்கு 20 மீட்டர் நீளம் கொண்ட சங்கிலி, குத்தூசி, நேர்கோண கட்டை என்று அழைக்கப்படும் அளவீடு சீரமைப்பு கம்பி போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உடுமலை பகுதியில் உள்ள இந்த நிலஅளவை உபகரணங்கள் குறைபாட்டுடன் உள்ளதாக தெரிகிறது. அவற்றை ஜமாபந்தியில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.

73 கிராமங்கள்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

உடுமலை தாலுகாவில் உடுமலை, குறிச்சிக்கோட்டை, பெரியவாளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்டங்களில் 73 கிராமங்கள் உள்ளது. இங்குள்ள நிலங்களை அளவீடு செய்ய பயன்படுத்தப்படும் சங்கிலி, குத்தூசி, அளவீடு சீரமைப்பு கம்பி போன்ற உபகரணங்கள் குறைபாட்டுடன் உள்ளதாக தெரிகிறது.

ஒரு சில கிராமங்களில் இந்த உபகரணங்கள் இல்லாத நிலையே உள்ளது. ஆனால் ஜமாபந்தியின் போது அனைத்து கிராமங்களிலும் நிலஅளவை உபகரணங்கள் சரியாக உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதிகாரிகள் நடப்பு ஆண்டுக்கான பசலியை முடித்து விட்டனர். அதிகாரிகள் செய்யும் தவறால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. உபகரணங்களில் உள்ள குறைபாடுகளால் நிலத்தின் எல்லைகள் உறுதிப்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது.

ஒரே இடத்தில் ஆய்வு

அப்போது ஏற்படும் குறைபாட்டால் நில உரிமையாளர்களுக்குள் வாக்குவாதமும் தகராரும் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று நிவாரணம் தரும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நிலத்தின் மீது உள்ள பற்றுதல் காரணமாக ஒரு சிலர் கைகலப்பு செய்யும் நிலைக்குகூட வந்து விடுகின்றனர்.

எனவே உடுமலை தாலுகா கிராம நிர்வாக அலுவலங்களில் உள்ள நில அளவை உபகரணங்களை மாவட்ட இணை இயக்குனர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் வைத்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள குறைபாடுகளும் உபகரணங்கள் இல்லாத கிராமங்களையும் கண்டறிந்து முழுமையான நில அளவைக்கு ஏற்பாடு செய்ய இயலும் என்று தெரிவித்தனர்.


Next Story