பார்வையிழந்த பெண்ணை தாக்கிய பெண் ஊழியர் பணியிடை நீக்கம்
அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அன்னதானம் சாப்பிட வந்த பார்வையற்ற பெண்ணை தாக்கிய கோவில் பெண் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அன்னதானம்
அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலில் டோக்கன் முறையில் மதியம் 100 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மதியம் டோக்கன் வாங்கிய 15-க்கும் மேற்பட்டோர் வராததால், டோக்கன் வாங்காமல் காத்திருந்தவர்களை சாப்பிட அனுமதித்துள்ளனர்.
அதில் கண் பார்வையற்ற இந்திராணி (வயது 38) என்ற பெண்ணை சாப்பிட உள்ளே அனுமதிக்க முடியாது என்று அன்னதான கூடத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் கலா தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கலா, இந்திராணியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இணை ஆணையர் விசாரணை
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இணை ஆணையர் குமரகுரு, உதவி ஆணையர் செல்வராஜ் ஆகியோர் நேற்று அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து சம்பவம் குறித்து கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி மற்றும் ஊழியர் கலாவிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பெண் ஊழியர் கலாவை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் குமரகுரு உத்தரவிட்டார்.
கோரிக்கை
இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ''அன்னதானம் வழங்குவதை குளறுபடி இல்லாமல் முறைப்படுத்த வேண்டும். கோவில் பெண் ஊழியரின் தவறான போக்கை கண்டித்து நடவடிக்கை எடுக்காத செயல் அலுவலர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.
அங்கிருந்த வக்கீல் சத்யமூர்த்தி கூறுகையில், "கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 2 திருமண மண்டபங்களையும் பராமரித்து அங்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் அலுவலகத்திலேயே மண்டபங்களை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு கோவிலுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும். மாதம் ஒரு முறையாவது இணை ஆணையர் அவினாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.