சாத்தான்குளம் பகுதியில்கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்: கலெக்டர்
சாத்தான்குளம் பகுதியில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் புகாரி முன்னிலை வகித்தார். தாசில்தார் தங்கையா வரவேற்று பேசினார். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 95 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 31 ஆயிரத்து 725 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில்,
சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளுக்கு பகுதிகளில் மாவட்ட ஊராட்சி மூலம் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறுகியகாலத்தில் நடைபெற்றுள்ளது. கனிமொழி எம்.பி. முயற்சியால் நெல்லை கன்னடியான் கால்வாய் சீரமைக்கும் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதனால் சாத்தான்குளம் தாலுகா அரசூர், கொம்மடிக் கோட்டை பகுதிகளுக்கு விரைவில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்துஊராட்சிகளும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தன்னிறைவு பெறும்வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாத்தான்குளம் பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும், என்றார்.
இதில் மாவட்டஊராட்சித் தலைவர் பிரம்மசக்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், சாத்தான்குளம் யூனியன் தலைவி ஜெயபதி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் லெனின் நன்றி கூறினார்.
முன்னதாக சாத்தான்குளம் வீரஇடக்குடி தெருவில் மின்விளக்கு வசதியின்றி அவதிப்பட்ட பிளஸ்-2 மாணவி வீட்டுக்கு கலெக்டர் உத்தரவின் பேரில் துரிதமாக மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாணவி வீட்டுக்கு கலெக்டர், எம்.எல்.ஏ. ஆகியோர் சென்றனர். பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மாணவி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாணவி குடும்பத்துக்கு எம்.எல்.ஏ. ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். அந்த மாணவி வீட்டுக்கு உரிய பட்டா கிடைக்கவும், வீடு கட்டவும் ஏற்பாடு செய்வதாக கலெக்டர் உறுதி அளித்தார்.