சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவெடுங்கள்- கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு: கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவெடுங்கள்- கீழ் கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கலாம் என்று கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது தொடர்பாக உரிய முடிவு எடுக்கலாம் என்று கீழ்கோர்ட்டுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து, அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தது..

இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சில சட்டப்பிரிவுகளை கீழ்கோட்டு் நீக்கியது. மீண்டும் அவற்றை சேர்க்ககோரிய மனுவை தள்ளுபடி செய்தது. இது சட்டவிரோதம். இந்த இரட்டை கொலையில் கூட்டுச்சதி (இந்திய தண்டனைச்சட்டப்பிரிவு 120-பி) முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த பிரிவு உள்பட உரிய சட்டப்பிரிவுகளை கூடுதலாக சேர்க்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சாதகமாகிவிடும்

இந்த வழக்கை ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்தபோது, "தந்தை-மகன் கொலை வழக்கில் கீழ்கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. கூட்டுச்சதி உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகள் இந்த வழக்கில் சேர்க்கப்படவில்லை என்றால், அது கைதானவர்களுக்கு சாதகமாக அமைந்து விடும்" என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்த ஐகோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

கீழ்கோர்ட்டுக்கு உத்தரவு

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இளங்கோவன் நேற்று பிறப்பித்தார்.

அதில், இரட்டைக்கொலை வழக்கில் கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்க்க கோரிய சி.பி.ஐ.யின் மனுவை கீழ்கோர்ட்டு தள்ளுபடி செய்தது ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் 2-வதாக தாக்கலான குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கூட்டுச்சதி (120 பி) உள்ளிட்ட கூடுதல் சட்டப்பிரிவுகளை சேர்ப்பது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டு உரிய முடிவு எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story