சாத்தான்குளம் குகஸ்ரீ பாலகணபதி சுவாமிகள் மகா குருபூஜை விழா
ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் குகஸ்ரீ பாலகணபதி சுவாமிகள் மகா குருபூஜை விழா நடந்தது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் கிராமத்தில் குகஸ்ரீ பாலகணபதி சுவாமிகளின் மகா சமாதி அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு 22-வது ஆண்டு மகா குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் சென்னை தண்டபாணி சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது.. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து நேற்று காலை 7.30 மணிக்கு மங்கள இசையுடன் மகா குருபூஜை விழா தொடங்கியது. காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், தேவாரம், திருப்புகழ், சண்முகக்கவசம், பஞ்சாமிர்த வண்ண பாராயண நிகழ்ச்சியும், அதன் பின்னர் கலச பூஜை, குருபூஜை, மகா தீபாராதனை நிகழ்ச்சியும், மாகேஸ்வர பூஜை நடந்தது. இந்த விழாவில் சென்னை, ஈரோடு, ராமநாதபுரம், மதுரை, கோவை, ராமநாதபுரம், சாத்தான்குளம், குயவன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ரவி தலைமையில் குகஸ்ரீ பாலகணபதி சுவாமிகள் அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
======