சத்தியமங்கலத்தில் 2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு
சத்தியமங்கலத்தில் 2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் 2 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீப்பிடித்து எரிந்தது
சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் முனிர் அகமத் (வயது 63). இவர் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மார்க்கெட்டிங் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது மோட்டார்சைக்கிளை வீட்டுக்கு வெளியே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்கு தூங்க சென்றார்.
இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் அவருடைய மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று முனிர் அகமத் வீட்டின் கதவை தட்டி கூறினர். உடனே அவரும் வீட்டின் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது அவருடைய மோட்டார்சைக்கிள் தீப்பிடித்து எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் மோட்டார்சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
5 தனிப்படை அமைப்பு
இதனிடையே அதே வீதியை சேர்ந்த தர்மலிங்கம் மகன் கதிரவன் (23) என்பவர் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த அவருடைய மோட்டார்சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்தவர்கள் அந்த மோட்டார்சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 2 பேரின் மோட்டார்சைக்கிளும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தனர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனிப்படையினர் தீ வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.