குறைந்த செலவில் ஏழைகளின் பசியை போக்கும் அம்மா உணவகத்தால் உயிர் வாழ்கிறோம் சாலையோர வாசிகள் நெகிழ்ச்சி


குறைந்த செலவில் ஏழைகளின் பசியை போக்கும்  அம்மா உணவகத்தால் உயிர் வாழ்கிறோம்  சாலையோர வாசிகள் நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 21 Sept 2022 1:00 AM IST (Updated: 21 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சாலையோர வாசிகள் நெகிழ்ச்சி

ஈரோடு

குறைந்த செலவில் ஏழைகளின் பசியை போக்கி வரும் அம்மா உணவகங்களால் உயிர் வாழ்கிறோம் என்று சாலையோர வாசிகள் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

அம்மா உணவகம்

தமிழ்நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், தொடர்ந்து நகராட்சிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் காலை, பகல், இரவு என்று 3 வேளை உணவு விற்பனை நடக்கிறது. பிற பகுதிகளில் காலை மற்றும் மாலையில் மட்டுமே உணவு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு இட்லி விலை ரூ.1 என்பதால் மக்களின் மகத்தான ஆதரவை இந்த திட்டம் பெற்றது. காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் என்று வழங்கப்பட்டது. இதில் பணியாற்ற மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். ஆட்சி மாறும்போது காட்சிகள் மாறும் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க. ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்தபோது, பொதுவாக அனைவரின் பார்வையும் அம்மா உணவகத்தின் மீதே இருந்தது. தொடர்ந்து இனி இது இயங்குமா? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் இருந்தது. ஆனால், ஏழைகளின் பசியை போக்கும் அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும் என்ற அறிவிப்பு, ஆறுதலை கொடுத்தது.

15 உணவகங்கள்

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மாநகராட்சி பகுதியில், அரசு ஆஸ்பத்திரியையும் சேர்த்து 11 அம்மா உணவகங்களும், கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிகளில் தலா ஒன்று என 4 உணவகங்களும் உள்ளன. மொத்தமாக 15 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. ஒரு உணவகத்துக்கு தலா 10 பணியாளர்கள் என்ற வீதத்தில், மொத்தம் 150 பேர் பணியிலும் உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்தில் ஆர்.என்.புதூர், பி.பி.அக்ரகாரம், கருங்கல்பாளையம். 2-வது மண்டலத்தில் வ.உ.சி.பூங்கா, சின்னமார்க்கெட், சூளை. 3-வது மண்டலத்தில் காந்திஜி ரோடு, அரசு தலைமை ஆஸ்பத்திரி, சூரம்பட்டி. 4-வது மண்டலத்தில் கொல்லம்பாளையம், மரப்பாலம் என 11 இடங்களில் அம்மா உணவகங்கள் உள்ளன.

இந்த உணவகங்கள் தினமும் காலை முதல் மாலை வரை இயங்குகின்றன. பணியாளர்கள் காலை 4 மணி முதல் பகல் 11 மணி வரையும், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் என பணி நேரத்தை 2 ஆக பிரித்து வேலை செய்கிறார்கள். ஈரோட்டில் காலையில் இட்லி, வெண் பொங்கல், தோசை விற்பனை செய்யப்படுகிறது. மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம் விற்கப்படுகிறது. ஒரு இட்லி ரூ.1, ஒரு தோசை ரூ.5, வெண்பொங்கல் ரூ.5, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

விற்பனை

ஈரோட்டை பொறுத்தவரை முதல் அம்மா உணவகம் ஈரோடு காந்திஜி ரோட்டில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. அப்போது முதல் இப்போதுவரை இந்த உணவகம் காலை முதல் மாலை வரை பரபரப்பாக இயங்கி வருகிறது. இங்கு தொடக்கத்தில் தினசரி ரூ.3 ஆயிரத்து 600-க்கு உணவு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதே விற்பனை பிற உணவகங்களிலும் இருந்தது. கொரோனா காலத்தில், அம்மா உணவகங்கள் இலவச உணவுக்கூடங்களாக மாறின. காலை, மதியம், இரவு என்று 3 மணி நேரமும் உணவு வழங்கப்பட்டது.

கொரோனா விதிமுறை தளர்வுகளுக்கு பின்னர், மீண்டும் அம்மா உணவகத்தில் விற்பனை தொடங்கியபோது, வியாபாரம் குறைந்தது. சராசரியாக ரூ.1,300 என்ற அளவுக்குத்தான் விற்பனையாது. ஆனால், சமீபகாலமாக ஈரோட்டில் அம்மா உணவகங்களின் விற்பனை அளவு அதிகரித்து இருக்கிறது. தற்போது தினசரி ரூ.2 ஆயிரத்து 650-க்கு விற்பனையாகிறது.

அச்சம்

இதுபற்றி ஈரோடு காந்திஜி ரோடு அம்மாஉணவக பொறுப்பாளரும், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி, நகராட்சி அம்மா உணவக பணியாளர்கள் நல சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ள எஸ்.செல்வி கூறியதாவது:-

2 ஆண்டுகள் கொரோனா தாக்குதல் வந்தபோது இனி, அம்மா உணவகங்கள் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், எங்களுக்கு பணி பாதிப்பு இல்லாமல், இலவச உணவகங்களாக அம்மா உணவகங்கள் இயங்கின. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது பலரும் எங்களை அச்சப்படுத்தினார்கள்.

ஆனால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மா உணவகங்கள் தொடர்ந்துசெயல்படும் என்று அறிவித்து எங்களுக்கு மகிழ்ச்சி அளித்தார்.

அதே நேரம், அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்தது. எனவே நாங்கள் காலை உணவில் இட்லி, வெண் பொங்கலுடன், தோசை வழங்கினோம். இதனால் ஏராளமானவர்கள் இப்போது எங்களை தேடி வருகிறார்கள். இப்போது நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 650 என விற்பனையை அதிகரித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தற்போது ஒவ்வொரு உணவகத்திலும் சராசரியாக தினமும் தலா 50 கிலோ அரிசி செலவிடுகிறோம். இதற்காக தரமான அரிசியை அரசு வழங்குகிறது. காய்கறிகள் தினசரி வந்து விடுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை கியாஸ் சிலிண்டர்கள் வருகின்றன. மாதத்துக்கு ஒரு முறை மளிகைப்பொருட்கள் வந்து விடுகின்றன. இதனால் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பணியாற்றுகிறோம்.

தொடக்கத்தில் எங்களுக்கு தினசரி ரூ.250 ஊதியம் வழங்கப்பட்டது. ஈரோட்டில் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கைகள் காரணமாக எங்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் தினசரி ஊதியம் ரூ.325 ஆக உயர்ந்தது. தொடர்ந்து எங்கள் முயற்சியால் திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட பணியாளர் களுக்கும் ஊதியம் உயர்த்தப்பட்டது. ஆனால் மாநிலத்தில் பல மாவட்டங்களில் இன்னும் ரூ.250 மட்டுமே வழங்கப்படுகிறது.

எங்கள் பொருளாதார நிலையை கருத்தில்கொண்டு எங்களின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். இதற்கு பதிலாக அம்மா உணவகங்களில் இரவு நேரத்திலும் நாங்கள் உணவு விற்பனை செய்ய தயாராக இருக்கிறோம். பொதுமக்களும் எங்களிடம் கேட்கிறார்கள். அதுபோல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து உள்ள மிக சிறப்பான திட்டமாக உள்ள பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்கும் பணியை எங்களிடம் கொடுத்தால், அம்மா உணவக சாப்பாடு போன்று குழந்தைகளுக்கான உணவையும் சுவையாகவும், தரமாகவும் செய்வோம். எங்கள் கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் கூற அவரை சந்திக்கும் ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுவை

இங்கு சாப்பிட வந்த எம்.பிரகாஷ் என்ற வாலிபர் கூறியதாவது:-

நான் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடையில் கணக்கராக வேலை செய்கிறேன். சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து தினமும் வந்து செல்கிறேன். எனவே காலையில் வீட்டில் இருந்து சாப்பிட்டு வருவது, மதியத்துக்கு சாப்பாடு எடுத்து வருவது சாத்தியம் இல்லை. இதற்காக ஓட்டலுக்கு சென்றால் தினசரி சாப்பாட்டுக்கே ரூ.200 செலவாகும். இதை தவிர்த்தால் பசியுடன்தான் இருக்க வேண்டும். ஆனால், தினசரி ரூ.20 செலவில் நான் அம்மா உணவகத்தில் காலை, மதியம் சாப்பிட்டு விடுகிறேன். அம்மா உணவகம் இருப்பதால், எனது பெற்றோரும் உணவு குறித்து கவலைப்படுவதில்லை. எனது நண்பர்களையும் பல முறை அழைத்து வந்து இங்கு சாப்பிட்டு சென்று உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயிர் வாழ்கிறோம்

இங்கு பணியாற்றும் கே.பத்மா என்பவர் கூறும்போது, 2015-ம் ஆண்டு இந்த பணியில் சேர்ந்தேன். கணவர் உடல் நலம் சரிஇல்லாமல் உள்ளார். ஒரே மகன். கொரோனா காலத்தில் அம்மா உணவகம் இருந்ததால் மட்டுமே என்னால் குடும்பத்தை நடத்த முடிந்தது. இந்த பணியில் எங்களை நீட்டித்து தந்தால் மகிழ்ச்சியாக வேலை செய்வோம் என்றார்.

பொதுவாகவே அம்மா உணவகங்களில் தொடர்ச்சியான வாடிக்கையாளர்களாக சாலையோர வாசிகள் உள்ளனர். அவர்களில் சிலர் கூறியதாவது:-

நாங்கள் கோவில்கள், கடைவீதிகளில் அமர்ந்து யாராவது உணவு, காசு கொடுப்பார்களா என்று எதிர்பார்த்து இருப்போம். சில நேரங்களில் வேண்டுதல், பிறந்தநாள், திருமணநாள் என்று யாராவது உணவு பொட்டலங்கள் தருவார்கள். பல நாட்கள் எதுவும் கிடைக்காது. காலை 9 மணி வரை காத்திருப்போம். அதுவரை யாரும் உணவு தரவில்லை என்றால் அம்மா உணவகத்துக்கு வந்துவிடுவோம். இங்கு எங்களை பாகுபாடு இல்லாமல் நடத்துகிறார்கள். எங்களிடம் இருக்கும் சில்லரையை கொடுத்து இட்லி, தோசை, பொங்கல் என்று வாங்கி சாப்பிடுவோம். குறைந்த செலவில் ஏழைகளின் பசியை போக்கி வரும் அம்மா உணவகம் இருப்பதால்தான் உயிருடன் வாழ்கிறோம் என்றார்கள்.

அம்மா உணவகங்களை புதுப்பித்து, ஒரு சில கூடுதல் வசதிகள் செய்வது, பணியாளர்களுக்கு 60 வயது வரை பணி உறுதி அளிப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றினால் மிகச்சிறப்பாக தொடர்ந்து பணியாற்றுவோம் என்கிறார்கள் பணியாளர்கள்.


Next Story