சனிப் பெயர்ச்சி விழா
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நடந்தது.
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் அய்யனடைப்பில் மகா பிரத்தியங்கிராதேவி-காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது. அங்கு 11 அடி உயர சனீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார். அங்கு சனி பெயர்ச்சி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமை தாங்கி பூஜைகளை நடத்தினார்.
விழாவை முன்னிட்டு காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கன்னிகா பூஜை, லட்சுமி பூஜை நடந்தன. 10 மணிக்கு பிரத்தியங்கிராதேவி, கால பைரவருக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. காலை 10.51 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சியான நேரத்தில் சனீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், தேன், நெய், திருநீறு, பஞ்சாமிர்தம், எள் உள்பட 64 வகையான அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா யாக வேள்வியும், மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தங்கள் ராசிக்கு ஏற்ப பரிகாரங்களும் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை சித்தர் பீடத்தின் சுவாமிகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மகளிர் அணியினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.