சனிப்பெயர்ச்சி மகாயாகம்
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சனிப்பெயர்ச்சி மகாயாகம் இன்று நடக்கிறது.
வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. சனி பகவான் மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனிப்பெயர்ச்சியையொட்டி ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும், சனி திசை மற்றும் சனி புக்தி நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்து கொள்வது அவசியம். தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் 4 இஞ்ச் உயரத்தில் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரராக காட்சி தருகிறார். இந்த சொர்ண சனீஸ்வரர் 20 அடி அகலம், 27 அடி நீளத்தில், 10 அடி ஆழ பாதாளத்தில் சன்னதி கொண்டு, ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து வருகிறார். இது தவிர 1½ அடி உயரத்தில் நீலா தேவியுடன், கையில் ஊன்று கோலுடன் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த சனீஸ்வரர்களுக்கு சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் சனிப்பெயர்ச்சி மஹா யாகம், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது.
பக்தர்கள் இந்த யாகம், அபிஷேக, பூஜைகளில் பங்கேற்று சங்கல்பம் செய்து கொண்டு பயன் பெறலாம். சனிப்பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி டாலர் மற்றும் அருட் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளும், பல்வேறு தானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.