சத்யா ஸ்டூடியோ குத்தகை நிலம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சத்யா ஸ்டூடியோ குத்தகை நிலம் தொடர்பான மேல்முறையீடு வழக்கு: தற்போதைய நிலை நீடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

அரசு குத்தகை நிலம் தொடர்பாக சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்துக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எம்.ஜி.ஆருக்கு சொந்தமான சென்னை அடையாறில் உள்ள சத்யா ஸ்டூடியோ நிறுவனத்துக்கு தமிழ்நாடு அரசு கடந்த 1968-ம் ஆண்டு 93 ஆயிரத்து 540 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு கொடுத்திருந்தது.

இந்த நிலம், எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கல்லூரிக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 1998-ம் ஆண்டு அதன் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில் அந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் குத்தகைக்காலம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 2004-ம் ஆண்டு வரையிலான குத்தகை வாடகை பாக்கி ரூ.31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்தை செலுத்தக்கோரி மயிலாப்பூர் வட்டாட்சியர் சத்யா ஸ்டூடியோ நிறுவனத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்தார்.

ஆனால் அந்த தொகையை சத்யா ஸ்டூடியோ தரப்பில் செலுத்தவில்லை என்பதால் கடந்த 2008-ம் ஆண்டு அந்த நிலத்தை திருப்பி எடுக்க உத்தரவிடப்பட்டது.

நிலம் ஒப்படைப்பு

இந்த உத்தரவை எதிர்த்து சத்யா ஸ்டூடியோ தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது.

இதற்கிடையில், குத்தகை நிலத்தை அரசிடம் சத்யா ஸ்டூடியோ நிர்வாகம் ஒப்படைத்துவிட்டது. ஆனாலும் அந்த நிலத்தில் ஒரு பகுதி கல்லூரியின் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசுக்கு செலுத்தவேண்டிய ரூ.31 கோடியே 9 லட்சத்து 79 ஆயிரத்தை சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்திடமிருந்து வசூலிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 3 மாதத்தில் எடுக்க வேண்டும். அரசிடம் ஒப்படைக்கப்பட்ட குத்தகை நிலத்தை வேலி அமைத்து அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும். இந்த நிலம் வழியாக இணைப்புச் சாலை அமைக்கும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த மார்ச் 30-ந் தேதி தீர்ப்பு அளித்தார்.

தற்போதைய நிலை

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சத்யா ஸ்டூடியோ நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு அரசு பதில் அளிக்க வேண்டும். விசாரணையை 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story