கடல் தாழைகள் பாதுகாக்கப்படுமா
தஞ்சை மாவட்டத்தில் கடல் வளத்ைத பாதுகாக்க கடல் தாழைகள் பாதுகாக்கப்படுமா என்று மீனவா்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
அதிராம்பட்டினம்;
தஞ்சை மாவட்டத்தில் கடல் வளத்ைத பாதுகாக்க கடல் தாழைகள் பாதுகாக்கப்படுமா? என்று மீனவா்கள் எதிர்பார்த்து உள்ளனா்.
கடல் தாழைகள்
கடல் தாழைகள் என்பது ஆழம் குறைந்த கடல் பகுதியில் கடல் நீரில் உள்ள உப்புத் தன்மையை தாங்கி வளரக்கூடிய தாவரம் ஆகும். இந்த தாவரத்தில் நிலத்தில் வளரக்கூடிய தாவரத்தைப் போல தண்டு, இலை, பூக்கள் ஆகியவை உள்ளது. கடல் தாழைகள் பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. கடலின் நிலப்பரப்பில் மண்ணில் ஊடுருவி தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். பொதுவாக 60-க்கும் மேற்பட்ட கடல் தாழைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் உள்ள கடல் பகுதியில் 14-க்கும் மேற்பட்ட கடல் தாழைகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
கடல்வாழ் உயிரினங்கள்
தமிழகத்தில் கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ள கடல் பகுதியில் கடல் தாழைகள் உள்ளன. கடல் தாழைகள் வளர சூரிய ஒளி அவசியம் என்பதால் ஆழம் குறைந்த கடல் பகுதியில் தான் கடல் தாழைகள் வளரும். தஞ்சை மாவட்டக் கடற்கரைப் பகுதியான தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரை 50 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள கடல் பகுதி ஆழம் குறைந்த பகுதியாக இருப்பதால் தஞ்சை வட்டத்தில் கடல் தாழைகள் அதிகம் வளர்கின்றன. கடல் தாழைகள் கடல் வளத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் ஆமை, கடல் பசு, கடல் அட்டை, பச்சைப் பல்லி, கடல் குதிரை ஆகிய அறிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வளர கடல் தாழைகள் பெரிதும் உதவுகிறது.
அழியும் நிலை
கடல் தாழைகள் கடலோரங்களில் ஒதுங்கி பின் அவை மக்கி கடல் நீரில் கலக்கும் போது இயற்கை உரமாக மாறி கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாக பயன்படுகிறது. இது தவிர கடல் அரிப்பைத் தடுக்கவும் கடல் தாழைகள் பயன்படுகிறது. தமிழக கடற்பகுதியில் குறிப்பாக அதிராம்பட்டினம் முதல் தேவிப்பட்டினம் வரை உள்ள கடற்கரை ஓரங்களில் கடல் தாழைகள் அதிகம் உள்ளது. பல்வேறு வகையில் கடல் நீர் மாசுபடாமல் பாதுகாக்கவும் கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்யவும் முக்கிய பங்காற்றி வரும் கடல் தாழைகள் பல்வேறு சுற்றுப்புற சீர்கேட்டால் அழிந்துவரும் நிலை உள்ளது.
தொழிற்சாலை கழிவுகள்
குறிப்பாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடல் நீரில் கலந்து கடல் தாழைகள் அழியும் நிலை உருவாகி விடுகிறது. தஞ்சை கடற்பகுதியில் சமீப காலங்களாக தொடர்ந்து வெளி மாவட்ட அதிவேக மற்றும் பெரிய வகை விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதால் கடல் தாழைகள் முற்றிலும் அழிந்து விடும் நிலை உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை காக்கவும், கடல் நீர் மாசுபடாமல் தடுக்கவும், கடல் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும் கடல் தாழைகளை பாதுகாக்க வேண்டும். இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு அவற்றை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.