கோவில் இடம் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்


கோவில் இடம் ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்
x

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கோவில் இடம் ஆக்கிரமிப்பை உடனடியாக மீட்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கோவில் இடம் ஆக்கிரமிப்பை உடனடியாக மீட்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர்.தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விடுதலைவேந்தன் தலைமையில் கிராமவாசிகள் ராமையன், பாலு, இளவரசன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவில் இடம் ஆக்கிரமிப்பு

எங்கள் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.இது எங்கள் இடம். இனி யாரையும் சாமி கும்பிட அனுமதிக்க மாட்டோம் என தகராறு செய்கிறார்கள். நாங்கள் 120 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல தலைமுறைகளாக வழிபட்டு வருகிறோம். இதை தடுக்கும் விதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அந்த இடத்தை அளந்து முத்துமாரியம்மன்கோவில் பெயரில் பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த இடத்திற்கு ஒருவர் பட்டா வாங்கி, பத்திரமும் பதிவு செய்து வைத்துள்ளார். எனவே சட்ட விரோதமாக வழங்கிய பட்டா, பத்திரத்தை ரத்து செய்து அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடர்ந்து குடிநீர் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story