வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ.30½ லட்சம் மோசடி: கேரளாவை சேர்ந்தவர் மீது வழக்கு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 8 பேரிடம் ரூ.30½ லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள போ.நாகலாபுரத்தை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 46). இவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது நண்பர் மூலம் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எடப்பள்ளிடோல் தாய்பரம்பு பகுதியை சேர்ந்த விபின்பாபு கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். விபின்பாபு வெளிநாடுகளில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக தெரிவித்தார். ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கொடுத்தால் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
ரூ.30½ லட்சம் மோசடி
அதை நம்பி எனது மைத்துனர் ராஜேஷ் கண்ணனுக்கு வேலை வாங்கி தருவதற்கு ரூ.4 லட்சம் கொடுத்தேன். அத்துடன் நண்பர்கள் மற்றும் எனது ஊரைச் சேர்ந்த 7 பேருக்கு வேலை வாங்கி தருவதற்காக நண்பர் மூலமாக விபின்பாபுவிடம் வங்கி மூலமாகவும், ரொக்கமாகவும் மொத்தம் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் எனது நண்பர் இறந்து விட்டார். விபின்பாபு செல்போனை அணைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த விபின்பாபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீமைராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து விபின்பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.