சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக 2 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி


சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக 2 பேரிடம் ரூ.7 லட்சம் மோசடி
x

சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக ரூ.7 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட 2 பேர் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களிடம் அதுபற்றி கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

ரூ.91 லட்சம் மோசடி

கூட்டத்தில் வேலூர் அருகே பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த சுகுணா என்பவர் அளித்துள்ள மனுவில், ''எனக்கு சொந்தமான நிலம் பிரம்மபுரத்தில் உள்ளது. அந்த நிலத்தை அடமானமாக வைத்து பலவன்சாத்துகுப்பத்தை சேர்ந்த ஒருவரிடம் பணம் கேட்க சென்றேன்.

அப்போது அவர் அந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்குவதாக கூறினார். இதையடுத்து அவரிடம் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு நிலத்தை விற்பனை செய்தேன். முதற்கட்டமாக அவர் என்னிடம் ரூ.31 லட்சம் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ரூ.91 லட்சத்தை சில நாட்களில் தருவதாக கூறினார்.

ஆனால் இதுவரை ரூ-.91 லட்சம் தரவில்லை. அதனை தரும்படி கேட்டால் மிரட்டல் விடுக்கிறார். அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரவேண்டும்'' என்று கூறியிருந்தார்.

'எங்களால் முடியும்' என்ற சுய உதவிக்குழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவில், ''வேலூர் மாவட்ட காவல்துறையினரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுகின்றன. வாகனங்கள் ஏலம் விடும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு சில வாகனங்களை ஒதுக்கி ஏலம்விட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தனர்.

சிங்கப்பூருக்கு சுற்றுலா

காகிதப்பட்டறையை சேர்ந்த அமரேந்திரன், அரியூரை சேர்ந்த விநாயகமூர்த்தி ஆகியோர் அளித்த மனுவில், ''நாங்கள் இருவரும் சிங்கப்பூர் சுற்றுலா செல்வற்காக 18 பேரிடம் ரூ.6 லட்சத்து 95 ஆயிரம் வசூல் செய்து வேலப்பாடியை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்தோம். அவர் எங்களை இதுவரை சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்லவில்லை. எங்கள் பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகிறார். அவரிடம் இருந்து பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியிருந்தனர்.

தீ வைத்து எரிப்பு

குடியாத்தம் அருகே வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் அளித்த மனுவில், ''பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக எனக்கும் எங்கள் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் பிரச்சினை காணப்பட்டது. இதுதொடர்பாக எங்களுக்குள் மீண்டும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில் அவர் என்னுடைய குடிசை வீட்டை தீ வைத்து எரித்து விட்டார். இதுகுறித்து குடியாத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

ரூ.18 லட்சம் மோசடி

காட்பாடி அருகே உள்ள சேவூரை சேர்ந்த செல்வி, பிரம்மபுரத்தை சேர்ந்த பாரிவள்ளல், ''கே.வி.குப்பத்தை சேர்ந்த யோகேஷ் ஆகியோர் அளித்த மனுவில் கேரளாவை சேர்ந்த ஒருவர் காங்கேயநல்லூர் புதுபள்ளிகுப்பத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் பழைய பொருட்கள் வாங்கி விற்கும் தொழில் செய்தார். அவர் எங்களிடம் ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றார். தற்போது அவர் திடீரென தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடித்து அவரிடம் இருந்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்'' என்று தெரிவித்திருந்தனர்.


Next Story