என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி
நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக கூறி எலக்ட்ரீசியன் உள்பட 20 பேரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த ஓய்வு பெற்ற தொழிலாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காட்டுநெமிலியை சேர்ந்தவர் மணிசேகர் மகன் ஹரிகரன்(வயது 32) எலக்ட்ரீசியன். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு எனது மாமனார் ராமதாசுடன் என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நெய்வேலி 20-வது வட்டம் ஜோதி தெருவை சேர்ந்த கமலநாதன்(60) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது கமலநாதன் என்.எல்.சி.யில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்கள் உள்ளது. அதில் வேலைக்கு ஆட்களை சேர்த்து விடலாம். ரூ.4 லட்சம் கொடுத்தால், தனக்கு தெரிந்த விருத்தாசலம் காப்பான்குளத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற என்.எல்.சி. தொழிலாளி ராயப்பிள்ளை(62) என்பவர் அவருக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் வேலை வாங்கி தருவார் என்று கூறினார்.
ரூ.60 லட்சம் மோசடி
இதை நம்பிய ராமதாஸ் தனது மகள் கமலிக்கும், எனக்கும் சேர்த்து ரூ.4 லட்சத்தை கமலநாதன், ராயப்பிள்ளை ஆகியோரிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். எங்களை போலவே மேலும் 18 பேரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி மொத்தம் 20 பேரிடம் ரூ.60 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்து விட்டனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
மனுவை பெற்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் தேவி, சப்-இன்ஸ்பெக்டர் லிடியாசெல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளி கமலநாதன், ராயப்பிள்ளை ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் 2 பேரும் என்.எல்.சி.யில் வேலைவாங்கி தருவதாக சுமார் ரூ.60 லட்சத்தை மோசடி செய்து, அந்த பணத்தை குடும்ப செலவுக்காக, ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து, நெய்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.