மோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபர் படுகொலை- தப்பிச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு


மோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபர் படுகொலை- தப்பிச்சென்ற கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Aug 2023 8:54 PM GMT (Updated: 10 Aug 2023 4:50 AM GMT)

மோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபரை வெட்டிக்கொன்ற கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

மதுரை

அலங்காநல்லூர்,


மோட்டார் சைக்கிளை வழிமறித்து தொழில் அதிபரை வெட்டிக்கொன்ற கும்பலை ேபாலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

தொழில் அதிபர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகில் உள்ள கோவில்பாப்பாக்குடியை சேர்ந்தவர் பாலன் (வயது 45). இவர் அந்த பகுதியில் சொந்தமாக 'கீ செயின்' தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்தார். மேலும் கடைகள், வீடுகளுக்கு தண்ணீர் கேன்களும் சப்ளை செய்தார்.

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் கம்பெனியை பூட்டிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

வழிமறித்து படுகொலை

சிக்கந்தர்சாவடி அருகே சென்றபோது மர்ம நபர்கள் பாலனை திடீரென வழிமறித்தனர். உடனே அவர் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அலங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலனை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் சூப்பிரண்டு

இதுகுறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக பாலன் கொலை செய்யப்பட்டார், முன்விரோதம் காரணமா, தொழில் போட்டியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பிச் சென்றவர்களை தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், துணை சூப்பிரண்டு நீலமேகம், இன்ஸ்பெக்டர்கள் கீதா, பால்ராஜ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story