பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்
பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து இ்ல்லத்தரசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000-ம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. எனவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், இந்த திட்டத்தை எப்போது செயல்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.
ஆனால் எதிர்கட்சிகள், இந்த திட்டத்தை நிறைவேற்றவே முடியாது என்று தொடர்ந்து கூறி வந்தனர். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000-ம் உரிமைத்தொகை நிச்சயம் வழங்குவோம் என்று கூறி வந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்காக இந்த நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
அதாவது செப்டம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு (2024) மார்ச் மாதம் வரை 7 மாதங்களுக்கு 1 கோடி பேருக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்ததிட்டம் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் என்று அழைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக இந்த உரிமை தொகை யார்? யாருக்கு வழங்கப்படும் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக ஒரு குடும்ப அட்டையில் உள்ள ஒரு பெண்ணுக்கு (குடும்பத்தலைவி) மட்டுமே ரூ.1,000-ம் வழங்கப்படும். அந்த குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் ஆண்டு வருமானம் மொத்தம் ரூ.2½ லட்சத்து மிகாமல் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டிற்கு பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு ஒரு ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக இருக்க கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பயனாளிகள் தேர்வு
மேலும் இந்த உரிமைத்தொகை பெற பெண்கள் தாங்கள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்படும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் அமைக்கப்படும் குழுவினர் ரூ.1000 உரிமை தொகை பெறுவதற்கு தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வார்கள்.
இந்த திட்டம், ரேஷன் கார்டினை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 662 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் முதல்கட்டமாக 1 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000-ம் வழங்கப்படுகிறது. இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து இல்லத்தரசிகள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
பாரபட்சம் இன்றி பட்டியல்
சிவகாசியை சேர்ந்த பட்டாசு தொழிலாளி சபரிதேவி:- வருகிற செப்டம்பர் மாதம் முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனால் இதற்கான பட்டியல் தயாரிக்கும் போது பாரபட்சம் இன்றி தகுதி உள்ள அனைவருக்கும் இந்த தொகை வழங்க வேண்டும்.
கணவனை பிரிந்து மகனுடன் தனியாக வசித்து வரும் நான் ஏற்கனவே அரசு சார்பில் வழங்கப்படும் ஓய்வூதியம் பெற விண்ணப்பித்த போது பல்வேறு காரணங்களை கூறி எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தற்போது அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத்தொகை பெற நான் விண்ணப்பிக்க உள்ளேன். என்னை போல் உரிய ஆதரவு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
பரிசீலனை
அருப்புக்கோட்டையை சேர்ந்த காய்கறி வியாபாரி செல்வராணி:-
காய்கறி வியாபாரத்தில் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்காது. போதிய வருமானம் இன்றி குடும்ப சுைமயை சுமக்கும் என்னை போன்ற பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் அரசு ரூ.1,000 வழங்குவதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனை வரவேற்கிறேன்.
ஆனால் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்.
வரவேற்பு
கண்டியாபுரத்தை சோ்ந்த மீன் வியாபாரி பாண்டிச்செல்வி:-
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மீன் வியாபாரம் செய்து வருகிறேன். இதன் மூலம் தினமும் ரூ.200 வரை வருமானம் கிடைத்து வருகிறது. சில நேரங்களில் மீன் வியாபாரத்தில் நஷ்டமும் ஏற்பட்டு வருகிறது. போதிய வருமானம் இன்றி தான் தற்போது வரை குடும்பம் நடத்தி வருகிறோம். எங்களை போன்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் வரவேற்புக்குரியது.
இந்த திட்டத்தில் என்னை போன்ற சிறு தொழில் செய்பவர்களை கட்டாயம் பயனாளிகளாக சேர்த்து உரிய உதவி தொகைகளை வழங்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், வெம்பக்கோட்டை தாலுகா அதிகாரிகளும் எடுக்க வேண்டும்.
கூடுதல் கவனம்
ஆவாரம்பட்டி பகுதியை சேர்ந்த மண்பானை வியாபாரம் செய்யும் ராம திலகம்:-
தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். தற்போது நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வருகிறது. ஆதலால் அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி சலுகை அறிவிக்கும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அறிவிக்க வேண்டும்.
உரிமை தொகை கொடுப்பதில் அரசு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறதோ அதே அளவிற்கு விலையை குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி
ஆலங்குளம் வசந்த்நகரை சேர்ந்த இல்லத்தரசி லீலாவதி:-
கஷ்டப்படுகிற இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 கிடைக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் இந்த ஆயிரம் ரூபாயை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் இல்லத்தரசிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
ஆதலால் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவித்தொகை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச வரம்பு
விருதுநகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பழனீஸ்வரி:-
தமிழக அரசு பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க முன் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் தனியார் நிறுவனங்களில் பெரும்பாலான பெண்கள் கடந்த காலங்களை விட அதிக ஊதியம் பெறும் நிலையில் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை நிலை என்பது மிக சிரமத்திலேயே நடந்து வருகிறது. எனவே இந்த வருமான உச்சவரம்பினை அதிகரிக்க வேண்டும்.
கிராம பகுதிகளில் 10 ஏக்கர் புஞ்சை நிலம் இருந்தாலும் சாகுபடி செய்ய முடியாமல் அவை தரிசாக கிடக்கும் நிலையில் அவர்களில் பலர் 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்லும் நிலையில் உள்ளனர்.
எனவே அரசு உரிமைத்தொகையினை முடிந்த அளவிற்கு அதிகபட்ச பெண்களுக்கு கிடைக்கும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.