2,649 மாணவிகளுக்கு உதவித்தொகை


2,649 மாணவிகளுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 9 Feb 2023 12:15 AM IST (Updated: 9 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் 2,649 மாணவிகளுக்கு உதவித்தொகையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தில் 2,649 மாணவிகளுக்கு உதவித்தொகையை கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

உதவித்தொகை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2-வது கட்டமாக கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கி 2,649 மாணவிகளுக்கு சான்றிதழ் கோப்புறை மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வங்கி அட்டைகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த திட்டத்தின் கீழ் தற்போது 45 கல்லூரிகளில் படிக்கும் 2,649 மாணவிகளுக்கு புதுமைப்பெண் சான்றிதழ் மற்றும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வங்கி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 6-ம் முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி முடிக்கும் வரை ரூ.1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

பொருளாதார பாதுகாப்பு

இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம். இத்திட்டத்தினால், குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியும். குழந்தை திருமணத்தை தடுக்க முடியும். பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைக்க முடியும். பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவிக்கப்படுகிறது.

உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்து துறைகளிலும் பங்கேற்கச் செய்யப்படும். உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யப்படும். எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் பயில வழிவகை செய்து அரசின் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவிகள் மாதாந்திர உதவித்தொகையை பெற்று தங்களது மேற்படிப்பை முடித்து தங்களுக்கு விருப்பமான அரசு பணியில் சேர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக, கண்காட்சி அரங்குகள், பாரம்பரிய உணவு கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், உதவி கலெக்டர் சதீஸ்குமார், பேரூராட்சி தலைவர் சந்தோஷ்குமார், கல்லூரி முதல்வர் விஜயன், தாசில்தார் பன்னீர்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story