உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை- கலெக்டர் வழங்கினார்
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வழங்கினார்.
உதவித்தொகை
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 2-வது கட்டமாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் 2-வது கட்டமாக உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சிவகங்கை மருத்துவ கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் மாணவிகளுக்கு உதவி தொகையை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2-ம் கட்டமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள 37 கல்லூரிகளில் படிக்கும் 1,316 மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
பயன்படுத்த வேண்டும்
இதில் தற்போது முதல்கட்டமாக 606 மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தபடவுள்ளதால் வங்கிகளின் மூலம் கணக்கு தொடங்கி ஏ.டி.எம். கார்டும் வழங்கப்படவுள்ளது. இந்த உதவி தொகையை மாணவிகள் தங்களது கல்விக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்புடன் கணினி போன்ற பயனுள்ளவைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதிபாலன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா நன்றி கூறினார்.