மாணவிகளின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகையை செலுத்த நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாணவிகளின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகையை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தி மாணவிகளின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகையை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கியாளர்களுக்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தமிழ்நாடு அரசின் முன்னோக்கு திட்டமான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்-புதுமைப்பெண் திட்டம் தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் மொத்தமாக 4,152 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 3,023 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 388 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம்கள்
மேலும், 741 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. அதில் பள்ளிகளில் 52 விண்ணப்பங்களும், வங்கியில் 668 விண்ணப்பங்களும், பள்ளி மற்றும் வங்கியில் 21 விண்ணப்பங்களும் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்படாமல் 379 விண்ணப்பங்கள் இந்தியன் வங்கியிலும், 162 விண்ணப்பங்கள் பாரத ஸ்டேட் வங்கியிலும், 99 விண்ணப்பங்கள் கனரா வங்கியிலும், 34 விண்ணப்பங்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகள் என மொத்தம் 674 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. மேலும், 15 விண்ணப்பங்கள் வங்கி குறிக்கப்படாமல் உள்ளது.
எனவே, வங்கியாளர்கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு, மாணவிகளின் வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகையை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மின் ஆளுமை மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி மேலாளர்கள், கல்லூரி நிர்வாகிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.