குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு உதவித்தொகைதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?மாணவர்கள் கருத்து


குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு உதவித்தொகைதமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா?மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 26 March 2023 6:45 PM GMT (Updated: 26 March 2023 6:47 PM GMT)

குடிமைப்பணி தேர்வு எழுதுபவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால் தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் ஆர்வம் அதிகரிக்குமா? என்று மாணவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

தமிழ்நாடு சட்டசபையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 20-ந் தேதி தாக்கல் செய்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் அதில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து இந்திய குடிமைப் பணி தகுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

ரூ.10 கோடி நிதி

முதல் நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500-ம், முதன்மைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மையம் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வலர்கள் பயிலும் வட்டம், மாவட்ட மைய நூலகம் ஆகிய இடங்களிலும், போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி மையங்களிலும் பலர் போட்டித் தேர்வுகளுக்காக தயாராகி வருகின்றனர். தேர்வுக்கு தயாராகிக் கொண்டு இருப்பவர்கள் தமிழக அரசின் உதவித்தொகை திட்டம் குறித்து கூறிய கருத்துகள் வருமாறு:-

உறுதுணையாக இருக்கும்

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வு வரை பங்கேற்று விட்டு மீண்டும் முதல் நிலைத் தேர்வு எழுதவுள்ள தேனியை சேர்ந்த அரவிந்த் கூறும்போது, 'நான் 2 முறை முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். ஒருமுறை நேர்முகத் தேர்வு வரை சென்று இருக்கிறேன். மீண்டும் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். குடிமைப் பணித் தேர்வுக்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்க இருக்கும் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. முதன்மைத் தேர்வுக்கு சென்னையில் தங்கி இருந்து தயாராக வேண்டிய சூழல் உள்ளது. அதற்கு அரசின் இந்த உதவித்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இது பெரும் அளவில் உதவும். முதன்மைத் தேர்வுக்கான உதவித்தொகை ரூ.25 ஆயிரம் என்பதை இன்னும் கொஞ்சம் அதிகரித்து இருக்கலாம் என்பது எனது கருத்து. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யு.பி.எஸ்.சி. நடத்தும் என்.டி.ஏ., சி.டி.எஸ். தேர்வுகளுக்கும் இதுபோன்ற உதவித்தொகையை அரசு வழங்கினால் இன்னும் பலரின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும்' என்றார்.

அதிக தேர்ச்சி பெற உதவும்

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் முத்துத்தேவன்பட்டியை சேர்ந்த கதீஜா கூறும்போது, 'தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் முன்னேறிச் செல்ல உதவியாக இருக்கும். குடிமைப் பணித் தேர்வுகளில் முன்பு தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள். சமீப காலங்களாக தமிழர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ஓரிரு முறை தேர்வு எழுதி தோற்றுவிட்டால் அடுத்த முறை தேர்வு எழுத பொருளாதார பின்புலம் இருப்பது இல்லை. தற்போது அரசின் இந்த அறிவிப்பால் வரும் காலங்களில் தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாக வாய்ப்புள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் மாணவ, மாணவிகளுக்கு அதிகரிக்கும். அதற்காக தமிழக அரசுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்' என்றார்.

பொருளாதார சுமை குறையும்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கம்பத்தை சேர்ந்த ஹரிணி கூறும்போது, 'தமிழக அரசின் இந்த உதவித்தொகை வழங்கும் திட்டமானது, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுகளுடன் இருக்கும் பலருக்கு உறுதுணையாக இருக்கும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், இளம்பெண்கள் குடிமைத் தேர்வு எழுத வேண்டும் என்றால் தங்களின் பெற்றோரை சார்ந்தே இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

தற்போது அரசு உதவித்தொகை வழங்குவதால் பெற்றோருக்கு பொருளாதார சுமை குறையும். இந்த தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் அதிகம் பேரிடம் சென்றடையும். இந்த திட்டத்தின் பலன் அடுத்த சில ஆண்டுகளில் நடக்கும் தேர்வு முடிவுகளில் தெரிய வரும். தேர்வுக்கு தயாராகும் நபர்கள் இந்த உதவித்தொகையை நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனைகளை படைக்க வேண்டும்' என்றார்.

கனவுகள் கைகூடும்

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெருமாள்கவுண்டன்பட்டியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் கூறும்போது, 'திறமைமிக்க பல இளைஞர்கள் குடிமைப் பணித் தேர்வில் ஓரிரு முறை பங்கேற்று தோல்வியை தழுவிய பின்னர், பொருளாதார சூழல் காரணமாக மேற்கொண்டு தேர்வு எழுத முடியாத நிலையில் கிடைத்த வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுபோன்ற உதவித்தொகை திட்டம் இருந்து இருந்தால் பலரின் கனவுகள் கைகூடி இருக்கும். தற்போது கனவுகளுடன் இருக்கும் பலருக்கும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் அதிகம் பேர் பயனடைவதோடு, தேர்வுகளிலும் அதிகம் வெற்றி பெற வாய்ப்புள்ளது' என்றார்.


Related Tags :
Next Story