அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க முன்னேற்பாடு பணிகள் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை
அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியை தமிழக முதல்-அமைச்சர், வருகிற 5-ந் தேதியன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ளார்.
இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைகூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கல்லூரிகளில் படிக்கும் 995 மாணவிகளுக்கு பொதுமக்கள் அறியும் வண்ணம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் மாணவிகளுக்கு அன்றைய தினமே மாதாந்திர உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்காக கல்லூரிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை அந்தந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் விழா நிகழ்ச்சி நடைபெறும் அரசு சட்டக்கல்லூரி வளாகத்திற்கு அழைத்து வரவும். அதேபோல் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாணவிகளுக்கு உரிய வங்கிக்கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு உடனடியாக வழங்கவும், அனைத்து பணிகளையும் சமூகநலத்துறையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிகரசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.