சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை
கோத்தகிரி
கோத்தகிரி தாலுகா கட்டப்பெட்டு அருகே உள்ள ஒன்னதலை கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊர்த்தலைவர் லிங்கன் தலைமை வகித்தார். தேயிலை வாரிய துணை தலைவர் குமரன் கலந்துகொண்டு பேசினார். இதில் கலந்துக்கொண்ட தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் பேசியதாவது:-
தேயிலை வாரியம் மூலம் கவாத்து வெட்டும் எந்திரம் மற்றும் இலை பறிக்கும் எந்திரம் உள்ளிட்டவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினர் அதை வாங்கி பயன்பெற வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறு விவசாயிகளின் குழந்தைகளுக்கு தேயிலை வாரியம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் 8281105809 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் கிராம நிர்வாகிகள் பங்கேற்றனர். முடிவில் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்பு தலைவர் சுமதி நன்றி கூறினார்.