கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு உதவித்தொகை


கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு உதவித்தொகை
x
தினத்தந்தி 9 March 2023 6:45 PM GMT (Updated: 9 March 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் மாவட்ட கிறிஸ்தவ தேவாலய பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், கிறிஸ்தவ அனாதை இல்லம், தொழு நோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரியும் பணியாளர்களின் சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலய பணியாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சீனாட் ஆப்பெண்ட கோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், இந்த வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அதன்படி கல்வி உதவித்தொகை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவித்தொகை, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் உதவித்தொகை, ரூ.20 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகை, ரூ.5 ஆயிரம் ஈமசடங்கு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ரூ.6 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகை, ரூ.ஆயிரம் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.


Related Tags :
Next Story