சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ- மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023-ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

இதை பெறுவதற்கு மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு வருகிற 15-ந் தேதி வரையிலும் மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் இணையதளத்தின் விண்ணப்பிக்கலாம்.

இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்துக்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும்.

புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்கவேண்டும்.

இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story