அண்ணா பிறந்தநாளில் அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல்
அண்ணா பிறந்த நாளான நேற்று அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
ஈரோடு-
அண்ணா பிறந்த நாளான நேற்று அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
சர்க்கரை பொங்கல்
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதன்படி அரசு பள்ளிக்கூடங்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
இது அரசின் சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் இனிப்பான உணவாக இருந்தாலும், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுவதால், வழக்கமாக வழங்கப்படும் சத்துணவு சாப்பாடு வழங்கக்கூடாது என்று உத்தரவும் வழங்கப்பட்டு இருந்ததால் குழந்தைகள் மதிய உணவு இல்லாமல் சிரமப்பட்டனர்.
சாதம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் டாக்டர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சாதம், சாம்பார், முட்டை என்று வழங்கப்பட்டு வந்த சத்துணவு கடந்த சில ஆண்டுகளாக தினம் ஒரு கலவை சாதம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு பள்ளிக்கூடங்களில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. ஆனால் மதியத்துக்கு வேறு உணவுகள் வழங்கப்படவில்லை. காலையில் இருந்து பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய நேரத்தில் வெறும் சர்க்கரை பொங்கல் கொடுத்தனர். இதனை சுவைக்கு மட்டுமே சாப்பிட முடியும். பசிக்கு சாப்பிட முடியுமா?.
நேற்று வழக்கமான உணவு பட்டியலின் படி சாதம், பருப்பு சாம்பார் வழங்கப்பட வேண்டும். அந்த சாப்பாட்டை எதிர்பார்த்து இருந்த குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். ஏன் என்றால், வழக்கமான சாப்பாட்டுக்கான செலவினத்தையே சர்க்கரை பொங்கலுக்கும் பயன்படுத்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குற்றச்சாட்டு
இதனால் என்ன செய்வது என்று திகைத்த பணியாளர்கள் சாப்பாட்டுக்கு போடும் அரிசியிலேயே வெல்லத்தை வாங்கிப்போட்டு சர்க்கரை பொங்கல் சமைத்தனர். பொங்கலுக்கு தேவையான நெய், முந்திரி பருப்பு, உலர் பழம் எதுவும் இல்லை. சாப்பாட்டுக்கான புழுங்கல் அரிசியில் பொங்கல் சமைத்தால் குழந்தைகள் எப்படி சாப்பிடுவார்கள் என்ற அக்கறை வேண்டாமா?. அண்ணா பிறந்தநாளில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள் அரைகுறை சாப்பாட்டுடன் பசியில் இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஒரு தலைவர் பிறந்தநாளில் அரசு வழங்கும் உணவு, குழந்தைகளுக்கு அந்த தலைவர் மீதான பற்றினை ஏற்படுத்த வேண்டும். ஆனால் வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் அரைகுறையாக ஒரு உணவுத்திட்டத்தை அறிவிக்காமலேயே இருக்கலாம் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.