ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 592 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 592 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 21 ஆயிரத்து 592 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
பிளஸ்-1 பொதுத்தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்காக 105 மையங்களும், தனித்தேர்வர்களுக்காக 3 மையங்களும் என மொத்தம் 108 மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் சாமி கும்பிட்டுவிட்டு புறப்பட்டனர். மேலும், பள்ளிக்கூடத்துக்கு செல்லும் வழியில் உள்ள கோவில்களிலும் மாணவ-மாணவிகள் சிறப்பாக தேர்வை எழுத வேண்டும் என்று வேண்டி கொண்டார்கள்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பு அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவ-மாணவிகள் ஆங்காங்கே உட்கார்ந்து படிப்பதில் கவனம் செலுத்தினார்கள். அதன்பிறகு தேர்வு எழுதுவதற்கு தேவையான பேனா, பென்சில், நுழைவு சீட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குள் சென்று தங்களுக்காக ஒதுக்கப்பட்ட மேஜையில் அமர்ந்தனர்.
1,664 பேர் எழுதவில்லை
மாணவ-மாணவிகளுக்கான வினாத்தாள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு சீல் உடைக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கப்பட்டதும், வினாத்தாள்களை படிப்பதற்காக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பிறகு விடைத்தாள்களில் பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை சரிபார்க்க 5 நிமிடங்கள் வழங்கப்பட்டன. 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த தேர்வை 21 ஆயிரத்து 592 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். 1,664 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதவில்லை.
தேர்வில் முறைகேடு நடப்பதை தவிர்க்கும் வகையில் முதன்மை கண்காணிப்பாளர்கள் 105 பேர், துறை அதிகாரிகள் 110 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 1,447 பேர், பறக்கும் படையினர் 150 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்கள். மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது.
எளிதாக இருந்தது
மாற்றுத்திறனாளிகள், விபத்தில் காயம் அடைந்த மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவதற்கு உதவியாக162 ஆசிரிய-ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு வினாத்தாளில் உள்ள கேள்வியை வாசித்து, அதற்கு அவர்கள் கூறிய பதிலை விடைத்தாளில் ஆசிரியர்கள் எழுதி கொடுத்தார்கள். தேர்வை முடித்து விட்டு மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தார்கள். அவர்கள் கூறும்போது, "தமிழ் பாட தேர்வு கேள்விகள் எளிதாக இருந்தது. நாங்கள் நன்றாக எழுதி இருக்கிறோம். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது", என்றனர்.
தேர்வு முடிந்தபிறகு விடைத்தாள்கள் பாதுகாப்பாக மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 4 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. விடைத்தாள்கள் வைக்கப்பட்டு உள்ள அறைகளுக்கு 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன. பிளஸ்-1 பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந் தேதி நிறைவு பெறுகிறது.