நகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?-ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து


நகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?-ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து
x
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் நகராட்சியில் 11 தொடக்கப்பள்ளிகளில் 1,426 பேரும், 5 நடுநிலைப்பள்ளிகளில் 533 பேரும், ஒரு உயர்நிலைப்பள்ளியில் 1,194 பேரும் என மொத்தம் 3 ஆயிரத்து 153 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய வகுப்பறைகள் உள்ளன. ஸ்மார்ட் கிளாஸ் வசதியும் உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 1,959 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் ராசிபுரம் நகராட்சி கட்டுப்பாட்டில் 3 நடுநிலைப்பள்ளிகள், 4 தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 467 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளிபாளையம் நகராட்சியில் 3 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் 1,125 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருச்செங்கோடு நகராட்சியில் 6 நடுநிலைப்பள்ளிகளும், 6 தொடக்கப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

குமாரபாளையம் நகராட்சியில் தலா 2 உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 5 தொடக்கப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

நடுத்தர குடும்பத்தினர்

இந்த பள்ளிகளில் படிக்கும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள். பெரும்பான்மையான மாணவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் படித்து வரும் நகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன? என்பது பற்றி பெற்றோர்கள், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தூய்மையான குடிநீர்

அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளன நாமக்கல் மாவட்ட செயலாளர் மீனா:-

நகராட்சி பள்ளிகளில் குடிநீர் தூய்மையாக இருக்க வேண்டும். கழிவறையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும். குழந்தைகள் விளையாடுவதற்கு போதிய இடம் இருக்க வேண்டும். ஒரு பள்ளிக்கு உணவு சமைக்க 2 பேரை பணி அமர்த்த வேண்டும். ஒரு பள்ளிக்கு 15 ஆசிரியர்கள் தேவை என்றால் 10 முதல் 12 ஆசிரியர்களே உள்ளனர்.

ஒவ்வொரு பள்ளிக்கும் எத்தனை ஆசிரியர் இருந்தால், குழந்தைகள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதை அறிந்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கல்வியுடன், பல்வேறு திறன்களையும் வளர்க்க வேண்டும்.

விளையாட்டு மைதானம்

நாமக்கல்லை சேர்ந்த வக்கீல் மனோகரன்:-

நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில், மேல்நிலைப்பள்ளிகளை காட்டிலும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் போதிய இடவசதிஇல்லை. இந்த பள்ளிக்கு என்று தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. எனவே விளையாட்டு மைதானத்துடன் மற்றொரு இடத்தில் புதிய கட்டிடம் கட்டினால் வரும் காலங்களில் இந்த பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கும்.

இதேபோல் சைக்கிள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் சாலையின் ஓரத்தில் சைக்கிளை நிறுத்தும் நிலை உள்ளது. மேலும் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வருகை அதிகரிப்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டசெயலாளர் அன்புமணி:-

தற்போதைய காலகட்டத்தில் தமிழக அரசு நகராட்சி பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டிடங்களை கட்டி உள்ளது. தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து தாய்மார்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது உற்சாகத்துடன் அனுப்பி வைக்கின்றனர். இதன் காரணமாக குழந்தைகளின் வருகை சதவீதம் உயர்ந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று இதர திறன்களான சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளும் கற்று கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எளிதில் சந்தேகங்களை புரிய வைக்கின்றனர். குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்கள் அக்கறை செலுத்துகின்றனர். எனவே மக்கள் இதனை கருத்தில் கொண்டு நகராட்சி பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும்.

அடிப்படை வசதிகள்

பள்ளிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார்:-

பள்ளிபாளையம் நகராட்சி கண்டிப்புதூர் தொடக்கப்பள்ளியில் 404 பேரும், ஆவாரங்காடு தொடக்கப்பள்ளியில் 567 பேரும் படித்து வருகின்றனர். போதிய இடவசதி இல்லை. இந்த பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். விளையாட்டு மைதானம் இல்லை. நூலக வசதியும் இல்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நகராட்சி பள்ளிகளில் படிக்க வரும் குழந்தைகளுக்கு கல்வியுடன் நல்லொழுக்கக் கல்வியை கற்றுத்தர வேண்டும். போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் பற்றி எடுத்து கூறினால் மிகவும் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும் போது, நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கைக்கு ஏற்ப தேவையான அளவு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி வகுப்பறைகளுக்கு நிகராக ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளியில் மாணவர்களின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது என்றனர்.

அதிக சேர்க்கை

நகராட்சி பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறும் போது, நகராட்சி பள்ளிகள் அனைத்திலும், திறமையான அனுபவமும், கல்வி தகுதியும் உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசின் கல்வி கொள்கையின் படி 1:40 அதாவது 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. தற்போது வீடுகள் தோறும் சென்று பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வருகிறோம். அதன்படி நகராட்சி பள்ளிகளில் நடப்பாண்டு அதிகமான சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்களை விட சிறப்பான கல்வி அளிக்கும் சவாலை ஏற்று செயல்பட்டு வருகிறோம் என்றனர்.


Next Story