நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த கட்டிடங்கள்
உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த கட்டிடங்கள்
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சர்தார் சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது.இங்கு ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளியின் வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பள்ளி கட்டிடம் மற்றும் சர்வ சிக்ச அபியான் திட்டத்தின் கீழ் சி.ஆர்.சி மைய கட்டிடமும் கட்டப்பட்டது. அந்த கட்டிடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் சேதமடைந்து வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கல்வியை வளர்ச்சி அடையச்செய்யும் நோக்கில் பள்ளியின் வளாகத்தில் கடந்த 1968 ம் ஆண்டில் வகுப்பறை கட்டிடம் ஒன்றும் கடந்த 2005-2006-ல் சி.ஆர்.சி மைய கட்டிடமும் கட்டப்பட்டது. நல்ல முறையில் பயன் அளித்து வந்த அந்தக் கட்டிடங்கள் முறையான பராமரிப்பின்றி சேதம் அடைந்து காட்சி பொருளாக உள்ளது. வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை முற்றிலுமாக சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்
அதே போன்று சி.ஆர்.சி மைய கட்டிடமும் பராமரிப்பு இல்லாமல் செடிகள் முளைத்து சேதப்படுத்தி வருகிறது.இதை தக்க தருணத்தில் சீரமைத்து தொடர் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.சேதமடைந்த இந்த கட்டிடங்களால் பள்ளியில் படித்து வருகின்ற மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காட்சி பொருளாக உள்ள அந்த இரண்டு கட்டிடங்களையும் இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டலாம் அல்லது அதனை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம். இதனால் மாணவர்கள் பயன் அடைவார்கள். எனவே சர்தார் வீதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சேதம் அடைந்த கட்டிடங்களை சீரமைப்பதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.